சீவகன் காந்தருவதத்தையோடு கருத்தொருமித்து ஆதரவு பட் டின்புற்றிருக்கு நாளில், இனிய இளவேனிற் பருவம் வந்தெய்தியது. அப்பொழுது மாந்தர் எல்லாம் பொழில் விளையாட்டிற் புக்கனர். அவ்விராசமாபுரத்திலுள்ள சுரமஞ்சரி என்பாளும், குணமாலை என்பாளும் தந் தோழிமாரோடு விளையாட அப்பொழிலிற் புக்கனர். அப் பொழிலின்கண் அப்பெருமாட்டியார் இருவரும் நறுஞ்சுண்ணங் காரணமாகத் தம்முட் கலாய்த்துக் கொண்டனர். தஞ்சுண்ணங்களுள் வைத்துச் சிறந்தது யாதென அறிதற்குத் தந்தோழியரை அறிஞரிடத்தே சுண்ணத்தோடு போக்கினர். அதுகண்ட அறிஞர் பலரும், அவரைச் சீவகன்பாற் காட்டி வினவும்படி அறிவுறுத்தனர். அம்மகளிர் அவ்வாறே அவற்றைச் சீவனுக்குக் காட்டி ”இவற்றுள் சிறந்தது செப்புக!” என்று வேண்டினர். சீவகன் அவற்றை நுண்ணிதின் ஆராய்ந்து, ”குணமாலை சுண்ணமே சிறப்புடையது,” என்றான். அம்மகளிர் தந்தலைவியர்பாற் சென்று இதனை உணர்த்தினர்.
|
|
இனி, அப் பொழிலிலே பார்ப்பனர் சோற்றுத் திரளை ஒரு நாய் தீண்டிற்றாக? அப் பார்ப்பனர் அதனைத் தடியாற் புடைத்தனர். அந் நாயைக்கண்ட சீவகன் இரக்கமுற்று, அதன் செவியில் ஐந்தெழுத்து மறைமொழியை ஓதினன். அதனால் அந்நாய் அவ்வுடல் ஒழித்துத் தேவனாயிற்று. சுதஞ்சணன் என்னும் பெயருடைய அத்தேவன் மீண்டுவந்து சீவகனை வணங்கினான். 'நின்னருளால் யான் இப்பொழுது இயக்கர் தலைவனாகிச் சந்திரோதயமென்னும் நகரில் இனிதே வாழும் பேறுபெற்றேன். என் பெயர் சுதஞ்சணன் என்பதாம். நினக்குக் குற்றேவல் செய்யும் கருத்துடையேன்' என்றனன். அது கேட்ட சீவகன் வியந்து ”நண்ப! நீ எனக்குப் பகைவரால் துன்பம் நேர்ந்தபோது துணைபுரிவாயாக! இப்பொழுது நின்னூர் சென்று இன்புற்றுவதிக!” எனக் கூறி விடுத்தனன்.
|
|