பக்கம் எண் :

                           
குணமாலையார் இலம்பகம் 499 

   நானம் : ஆகுபெயர்; மண்ணியதனால் உண்டான நறுமணத்தையுடைய மகளிர் எனவும் பொருள் கூறலாம். வேனிலான் - காமன்.

( 3 )
854 கொம்ப ரின்குயில் கூய்க்குடை வாவியுட்
டும்பி வண்டொடு தூவழி யாழ்செய
வெம்பு வேட்கை விரும்பிய வேனில்வந்
தும்பர் நீடுறக் கத்தியல் பொத்ததே.

   (இ - ள்.) கொம்பர் இன் குயில் கூய் - கொம்பிலே இனிய குயில் கூவ; குடை வாவியுள் - எல்லோரும் நீராடும் குளத்திலே; தும்பி வண்டொடு தூவழி யாழ்செய - தும்பியும் வண்டும் தூவழி யென்னும் பண்ணையுடைய யாழ்போல இசைக்க; வெம்பு வேட்கை விரும்பிய வேனில் வந்து - எரியுங் காமத்தை விரும்புதற்குக் காரணமான வேனில் வருதலாலே; உம்பர் நீள் துறக்கத்து இயல்பு ஒத்தது - மேலாகிய பெரிய துறக்கத்தின் தன்மையைப் போன்றது.

 

   (வி - ம்.) கூய் - கூவ, வந்து - வர : எச்சத்திரிபுகள்.

( 4 )
855 நாக நாண்மலர் நாறு கடிநக
ரேக வின்பத் திராச புரத்தவர்
மாக நந்து மணங்கமழ் யாற்றயற்
போக மேவினர் பூமரக் காவினே.

   (இ - ள்.) நாகம் நாண்மலர் நாறு கடிநகர் - நாகமரத்தின் புதுமலர் மணம் கமழும் சிறந்த நகரமாகிய; ஏக இன்பத்து இராசபுரத்தவர் - ஒப்பற்ற இன்பத்தையுடைய இராசமாபுரத்தில் உள்ளோர்; மாகம் நந்தும் மணம் கமழ் யாறு அயல் - வானிற் பொருந்த மணம் வீசுகிற, யாற்றின் ஓரத்தில் உள்ள; பூ மரக்காவின் போகம் மேவினர் - மலர் நிறைந்த மரங்களையுடைய காவிலே இன்பம் நுகர விரும்பினர்.

 

   (வி - ம்.) முதலிற் பொழிலில் இன்புறுதலையும் பின்னர் நீர்விளையாட்டையும் கருதினர். பொழில் யாற்றின் அயலில் உள்ளது.

 

   நாகம் - ஒருவகை மரம். நாள் மலர் - அன்றலர்ந்த பூ. கடி - ஈண்டு மணம் என்னும் பொருட்டு. இராசமாபுரம், இராசாராமபுரம் என நின்றது. மாகம் - விசும்பு. நந்துதல் - ஈண்டு விரிதல் என்னும் பொருட்டு. போகம் நுகர்ச்சி.

( 5 )
856 முழவங் கண்டுயி லாத முதுநகர்
விழவு நீர்விளை யாட்டு விருப்பினாற்
றொழுவிற் றோன்றிய தோமறு கேவலக்
கிழவன் மூதெயில் போற்கிளர் வுற்றதே.