பக்கம் எண் :

கடவுள் வாழ்த்து 5 

உண்டென வடநூல்கள் கூறும். காலை யிளஞாயிறு வெப்பந்தராதேனும் நண்பகலில் வெப்பந்தரும் ஆகையால், 'வெம்புஞ்சுடர்' என்றார். யாவரும் விரும்பும் சுடரென்று கொண்டு இளஞாயிறு என்றலுமாம். சுடரின், இன்: உறழ் பொரு. உறழ் பொரு - ஒன்றனால் ஒன்றை மிகுத்துக் கூறுதல். 'முடிமேல்' என்பதன்பின் 'வைத்த' என வருவித்து 'முடிமேல் 'வைத்த' என்க.

   செம்பொன் x பசும் பொன் தொடைமுரண் : வண்ண வேறுபாடு இன்று. இஃது அருகசரணம் : திருத்தக்க தேவரின் ஆசிரியர் அளித்தது.

( 2 )
3பன்மாண் குணங்கட் கிடனாய்ப்பகை நண்பொ டில்லான்
றொன்மாண் பமைந்த புனைநல்லறந் துன்னி நின்ற
சொன்மாண் பமைந்த குழுவின்சரண் சென்று தொக்க
நன்மாண்பு பெற்றே னிதுநாட்டுதன் மாண்பு பெற்றேன்.

   (இ - ள்.) பல்மாண் குணங்கட்கு இடன் ஆய் - பலவகையானும் சிறப்புற்ற நற்பண்புகளுக்கு இடம் ஆக ; பகை நண்பொடு இல்லான் - பகையும் நட்பும் இல்லாத இறைவன் (கூறிய) ; தொல்மாண்பு அமைந்த புனை நல்லறம் - பழைய மாட்சிமை பெற்ற அறத்தினையும்; சொல்மாண்பு அமைந்த குழுவின்- (அதனைப் பொருந்தி நின்ற) புகழ் சிறந்த சாதுக்களின் குழுவினையும் ; சரண்சென்று தொக்க நல்மாண்பு பெற்றேன் - புகலாகச் சென்று சேர்ந்த நல்வினையுடையேன் (ஆதலின்) ; இது நாட்டுதல் மாண்பு பெற்றேன் - இக் கதையை உலகில் நிலை பெறுத்துதற்குரிய நல்வினையுடையேனானேன்.

   (வி - ம்.) 'புனை நல்லறத்தையும் குழுவினையும் சரண் சென்று தொக்கநல்வினை உடையேன்' என்றலின் சாதுசரணமும் தன்மசரணமும் கூறியதாகும் இச் செய்யுள். சாதுக்கள்: திருத்தக்க தேவரின் ஆசிரியர்களாகிய சாதுக்கள். இவர்கள் பஞ்ச பரமேட்டிகளைச் சார்ந்தவர்கள்.

   சொல் - புகழ், ஆய் - ஆக: வினையெச்சத்திரிபு. 'பன்மாண் குணங்கட்கிடனாகப் புனைநல்லறம்' என்று கூட்டுக. 'பகை நண்பொ டில்லான் (கூறிய) பன்மாண் குணங்கட்கிடனாய' என மொழிமாற்றிப் பொருள் கொள்வர் நச்சினார்க்கினியர். 'இல்லா' என்பது பாடமாயின் , 'இல்லா அறம் ' எனக் கூட்டுக.

   இறைவன் நண்பிலனாயினும் அருஞ்சுரத்தின்கண் மரம்போல அடைந்தார்க்களித்தல் அவற்கியல்பு.

( 3 )

அவையடக்கம்

 
4 கற்பா லுமிழ்ந்த மணியுங்கழு வாது விட்டா
னற்பால் அழியுந் நகைவெண்மதி போனிறைந்த
சொற்பா லுமிழ்ந்த மறுவும்மதி யாற்க ழூஉவிப்
பொற்பா விழைத்துக் கொளற்பாலார் புலமை மிக்கார்.