பக்கம் எண் :

                       
குணமாலையார் இலம்பகம் 502 

   இனி யான் என் செய்வேன் என்று கெட்டது; இழைநிலா மன்செய் மாண்நகர் வட்டம் விட்டிட்டது - (அப்போது) அணி கலன்களின் ஒளி பெருமை பொருந்திய பெருநகரம் எங்கும் வட்டமாக விளங்கி வீசியது.

 

   (வி - ம்.) மண்டலம் : ஆகுபெயர்; வட்டக்குடை என்க. பிச்சம் - ஒருவகைக் குடை, ஒளி - ஈண்டு. ஞாயிற்றொளி என்க. மாணகர் - மாட்சிமையுடைய இராசமாபுரம்.

( 10 )
861 திருந்து சாமரை வீசுவ தெண்கடன்
முரிந்த மொய்திரை போன்ற வகிற்புகை
புரிந்த தாமங்க ளாகவப் பூந்துகள்
விரிந்து வானின் விதானித்த தொத்ததே.

   (இ - ள்.) திருந்து சாமரை வீசுவ - திருத்தமான சாமரைகள் வீசுவன; தெண்கடல் முரிந்த மொய்திரை பேன்ற - தெளிந்த கடலின் முரிந்த நெருங்கின திரைகளைப் போன்றன; அகிற்புகை புரிந்த தாமங்களாக - அகிற்புகைச் சுருள் கட்டப்பட்ட மாலைகளாக; அப் பூந்துகள் விரிந்து வானின் விதானித்தது ஒத்ததே - அப்போது தூவின் பூந்துகள் பரவி வானிலே மேற்கட்டி ஒன்றைக் கட்டியது போன்றது.

 

   (வி - ம்.) வீசுவ: பலவறிசொல்; வீசப்படுவனவாகிய சாமரை திரை போன்றன என்க. புகை தாமங்கள் ஆக என்க. தாமம் - மாலை. விதானித்தல் - மேற்கட்டியிடுதல்.

( 11 )
862 சோலை சூழ்வரைத் தூங்கரு வித்திரண்
மாலை ஊர்திகள் வைய மிவற்றிடைச்
சீலக் கஞ்சிநற் போதகஞ் செல்வன
நீல மேக நிரைத்தன போன்றவே.

   (இ - ள்.) சோலைசூழ் வரைத்தூங்கு அருவித்திரள் - சோலை சூழ்ந்து மறைத்த மலையினின்றும் அசையும் அருவித்திரள் போலும்; மாலை ஊர்திகள் வையம் இவற்றிடை - முத்த மாலையையுடைய பீலி வேய்ந்த ஊர்திகளும் வண்டியும் ஆகிய இவற்றின் நடுவே; சீலக்கு அஞ்சி நல் போதகம் செல்வன - பாகன் கற்பித்த ஒழுக்கத்திற்கு அஞ்சி அழகிய யானைகள் செல்வன; நீலமேகம் நிரைத்த்ன போன்றவே - கரிய முகில்கள் அணிவகுத்தன போன்றன.

 

   (வி - ம்.) சீலங்கு - சீலத்திற்கு; ஒழுக்கத்திற்கு. சாரியை இன்றி உருபு புணர்ந்தது. யானை வரிசைக்கு முகில் வரிசை உவமை.

( 12 )