பக்கம் எண் :

                       
குணமாலையார் இலம்பகம் 512 

நச்சினார்க்கினியர் வேற பிரித்துக் கூறுவர். அவரே, 'கழலானாகிய மார்பன் என்பாரும் உளர்' என்று கூறுவதனால் ஒன்றாகக் கூறுதலே சிறப்புடைத்து.

 

   ஞாயிறு போல்வான் எனினும் கலையைத் தோற்றுவிப்ப இருத்தலின் ஈண்டு மதியை உவமை கூறினார். 'பன்மீன் நடுவண் பால்மதி போல - இன்னகை ஆயமோ டிருந்தோற் குறுகி' (சிறுபாண் 219 - 20.) என்றார் பிறரும். இராகு கேதுக்களை ஒழிந்த ஏழு கோள்களும் சூழப்பட்டதொரு மதி இல்பொருளுவமை தோழர் நால்வரும் தம்பிமார் மூவரும் கோள்மீனுக்குவமை; மின்னும் மீனுக்கு ஒழிந்த தோழருவமை. இனி, ஞாயிறுந் திங்களும் தனக்குவமையாதலின், ஒழிந்த ஏழுகோளுமாம்.

( 32 )

வேறு

 
883 காளை சீவகன் கட்டியங் காரனைத்
தோளை யீர்ந்திட வேதுணி வுற்றநல்
வாளை வவ்வியி கண்ணியர் வார்கழற்
றாளை யேத்துபு தங்குறை செப்பினார்.

   (இ - ள்.) காளை சீவகன் - காளையாகிய சீவகன் ; கட்டியங்காரனைத் தோளை ஈர்ந்திடவே - கட்டியங்காரன் தோளைப் பிளக்கவே; துணிவுற்ற நல்வாளை வவ்விய கண்ணியர் - துணிவு கொண்ட நல்ல வாளின் தன்மையைக் கொண்ட கண்களையுடைய அம் மங்கயைர்; வார்கழல் தாளை யேத்துபு தம்குறை செப்பினார் - நீண்ட கழலணிந்த காலை வணங்கித் தம் குறையைக் கூறினர்.

 

   (வி - ம்.) ”செய்ந்நன்றியறிந்து கைம்மாறு செய்யக்கருதுதலும் பகைவர் செய்த தீங்கு குறித்து அவர்க்குத் தீங்குசெய்யக் கருதுதலும் அரசநீதி என்பது தோன்ற 'தோளையீர்ந்திடவே துணிவுற்ற வாள்' என்றார். 'ஆதியாய அரும்பகை நாட்டுதல்' (1920) என்றார் மேலும்” என்பர் நச்சினார்க்கினியர்.

( 33 )
884 சுண்ண நல்லன சூழ்ந்தறிந் தெங்களுக்
கண்ணல் கூறடி யேங்குறை யென்றலுங்
கண்ணிற் கண்டிவை நல்ல கருங்குழல்
வண்ண மாலையி னீரெனக் கூறினான்.

   (இ - ள்.) அண்ணல் ! நல்லன சுண்ணம் சூழ்ந்து அறிந்து - அண்ணலே ! நல்லனவாகிய சுண்ணத்தை ஆராய்ந்து பார்த்து; எங்களுக்குக் கூறு - எங்கட்குச் சொல்க; அடியேம் குறை என்றலும் - இதுவே அடியேம் வேண்டுகோள் என்று அம்மங்கையர் கூறினவுடன்; கண்ணின் கண்டு - கண்ணாலே பார்த்து; கருங்குழல் வண்ண மாலையினீர்! - கரிய குழலில் அழகிய மாலையுடையீர் !; இவை நல்ல எனக் கூறினான் - இவை நல்லவை என்று கூறினான்.