பக்கம் எண் :

                       
குணமாலையார் இலம்பகம் 514 

   (இ - ள்.) இவை நல்ல சுண்ணம் - இவை தூய சுண்ணம்; இவை இவற்றின் சிறிது அல்ல சுண்ணம் - இவை இவற்றினும் சிறிது நல்லவையல்லாத சுண்ணம்; அதற்கு என்னை என்றிரேல் - அதற்குக் காரணம் என்னென்று வினவினிரேல்; பொற்பு உடைப் பூஞ்சுண்ணம் புல்லு கோடைய - நன்மையுடைய அழகிய இச் சுண்ணம் பொருந்திய கோடையில் இடித்தவை; அல்ல சீதம்செய் காலத்தின் ஆயவே - மற்றவை குளிர்ச்சியுடைய மாரி காலத்தில் இடித்தவை(என்றான்).

 

   (வி - ம்.) இவை நல்ல சுண்ணம் என்றும், இவை இவற்றிற் சிறிது அல்ல சுண்ணம் எனவும் சுட்டினை ஈரிடத்துங் கொள்க. நல்ல என்பதனை இவற்றிற் சிறிது நல்ல அல்ல என்றும் ஓட்டுக. இவை தீயசுண்ணம் என்னாது நல்ல அல்ல சுண்ணம் என்றது சீவகனுடைய மொழித் திறத்திற்கொர் சான்றாம்.

( 37 )
888 வாரம் பட்டுழித் தீயவு நல்லவாந்
தீரக் காய்ந்துழி நல்லவுந் தீயவா
மோரும் வையத் தியற்கையன் றோவெனா
வீர வேனெடுங் கண்ணி விளம்பினாள்.

   (இ - ள்.) வாரம் பட்டுழித் தீயவும் நல்ல ஆம் - ஒருவர் மேல் அன்புற்ற காலத்து அவர்செய்யும் தீங்குகளும் நல்ல ஆகும்; தீரக் காய்ந் துழி நல்லவும் தீய ஆம் - முற்றும் வெறுப்புற்ற காலத்து அவர் செய்யும் நன்மைகளும் தீய ஆகும்; வையத்து இயற்கை அன்றோ? ஓரும் என - உலக இயற்கையிஃது அன்றோ ? ஆராய்ந்து பாரும் என்று; வீரவேல் நெடுங் கண்ணி விளம்பினாள் - வீர வேலனைய நீண்ட கண்ணினளாகிய கனகபத்கை கூறினாள்.

 

   (வி - ம்.) 'ஓரும்' என்னும் முற்றுச்சொல், 'பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை'(தொல். வினை. 30) என்ற சூத்திரத்தில் விளக்கின நிகழ்கால உம்மீறன்றி எதிர்கால உணர்த்தும் முன்னிலைப் பன்மையாகலின். இஃது ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி.

 

   இச் செய்யுட் கருத்தோடு ”காய்வதன்கண் உற்ற குணந்தோன்றாதாகும், உவப்பதன்கண் குற்றமுந் தோன்றா கெடும்” எனவரும் அறநெறிச்சாரவெண்பா (23) நினைவுகூரற்பாலது.

( 38 )
889 உள்ளங் கொள்ள வுணர்த்திய பின்னலால்
வள்ள னீங்கப் பெறாய்வளைத் தேனெனக்
கள்செய் கோதையி னாய்கரி போக்கினாற்
றெள்ளி நெஞ்சிற் றெளிகெனச் செப்பினான்.

   (இ - ள்.) வள்ளல்! - வள்ளலே !; உள்ளம் கொள்ள உணர்த்திய பின் அலால் - நீ கூறிய குறைகளை என் நெஞ்சு