பக்கம் எண் :

                     
குணமாலையார் இலம்பகம் 518 

சுண்ணம் வீழ்ந்தன - மங்கை சுரமஞ்சரியின் சுண்ணம் நிலத்தே வீழ்ந்தன; மாலைய வண்ணம் வண்டொடு தேன் கவர்ந்து உண்டவே - குணமாலையின் சுண்ணங்களை அழகிய வண்டும் தேனும் கவர்ந்துண்டன.

 

   (வி - ம்.) இச் செய்யுளாலும் வண்டும் தேனும் சிறந்தன என்பது தெரிகிறது. தூவியிட்டான்: ஒருசொல். சுரும்பும் மிஞிறும் ஒரு பண்பினவாதலின் சேர்ந்து ஒரு கையை (சுரமை சுண்ணம்) நோக்கின. (எனினும், உண்ணவில்லை) மற்றைய ஒரு பண்புடையவாகலின், சேர்ந்து மற்றைக் கையை நோக்கின. உண்ணாமல் வந்தவற்றிற்கு வைத்திடாமல் இவை கடிதுண்டன என்பது தோன்றக், 'கவர்ந்து' என்றார்.

( 44 )
895 தத்து நீர்ப்பவ ளத்துறை நித்திலம்
வைத்த போன்முறு வற்றுவர் வாயினீ
ரொத்த தோவென நோக்கிநுந் நங்கைமார்க்
குய்த்து ரைம்மினிவ் வண்ண மெனச்சொன்னான்.

   (இ - ள்.) தத்தும் நீர்ப்பவளத்து உறை நித்திலம் வைத்தபோல் - தத்தும் அலைநீரில் தோன்றிய பவளத்தே இருப்பன சில முத்துக்களைக் கொண்டு வந்து வைத்தாற்போலும்; முறுவல் துவர் வாயினீர் - முறுவலுடைய செவ்வாயினீர்!; ஒத்ததோ என நோக்க - (நாள் கூறிய நடுநிலை நுங்கட்குப்) பொருந்தியதோ என்று (இருவர் முகமும்) நோக்கி ; நும் நங்கைமார்க்கு இவ்வண்ணம் உய்த்து உரைமின் எனச் சொன்னான் - நும் தலைவியர்க்கு யான் தேற்றின முறையை மனம் கொள்ளுமாறு கூறுவீர் என்றனன்.

 

   (வி - ம்.) வேட்கை நிகழாத போதும் மகளிரைச் சிறப்பித்துக் கூறல் இயல்பு என்பது தோன்ற இருவரையும் சிறப்பித்துக் கூறினான்.

( 45 )
896 நீல நன்கு தெளித்து நிறங்கொளீஇக்
கோல மாக வெழுதிய போற்குலாய்
ஞாலம் விற்கும் புருவத்து நங்கைகண்
போலும் வேலவ னேபுகழ்ந் தேனென்றாள்.

   (இ - ள்.) நீலம் நன்கு தெளித்து நிறம் கொளீஇ - நீல மணியை நன்றாகக் கரைத்து நிறமும் கலந்து; கோலம் ஆக எழுதிய போல் குலாய் - அழகுற எழுதியவைபோல் வளைந்து; ஞாலம் விற்கும் புருவத்து - உலகை விற்கும் புருவத்தினையுடைய ; நங்கை கண்போலும் வேலவனே!- சுரமஞ்சரியின் கண்களைப் போலத் தப்பாத வேலவனே!; புகழ்ந்தேன் என்றாள் - நீ தேற்றின முறையை யான் உடம்பட்டுப் புகழ்ந்தேன் என்று கனகபதாகை கூறினாள்.