| 
			
			குணமாலையார் இலம்பகம் | 
			
			529  | 
		 
		
			 | 
			
  | 
		 
 
 
		
		 | 
 
		 
			   (இ - ள்.) விடாக் களிவண்டு உண - 
			விடாமல், களிப்பையுடைய வண்டுகள் உண்ணுமாறு; விரிந்த கோதையர் படாக்களி 
			இளமுலை பாய - மலர்ந்த மலர்மாலையரின் சாயாத களிப்பை யூட்டும் இளமுலைகள் 
			பாய்தலால்; விண்ட தார்க்கடாக் களிற்று ஏறுழ்வலிக் காளை - அலர்ந்த 
			தாரணிந்த, மதயானை போன்ற மிக்க வலிபடைத்த காளையாகிய; சீவகன் - சீவகன் ; 
			அடாக் களியவர் தொழில் காண ஏகினான் - ஒழுக்கக் கேடுபண்ணாத 
			களிப்பையுடையார் விளையாட்டைக் காணச் சென்றான். 
 
  | 
 
		  | 
 
	 
 
 
		
		 | 
 
		 
			   (வி - ம்.) நச்சினார்க்கினியர் 
			‘காளை‘என்பது நந்தட்டனை உணர்த்துவதாகக் கூறிச் சீவகன் அடாக்களியவர் 
			தொழில் காணுமாறு, நந்தட்டன் அங்கிருந்து போயினான் என்று பொருள் 
			கூறுவர். அவர் மேலும் கூறுவதாவது: 
 
  | 
 
		  | 
 
	 
 
 
		
		 | 
 
		 
			   சுண்ணந் தேற்றுகின்ற காலத்திருந்த நந்தட்டன், சீவகன் நீர் 
			விளையாட்டின் வினோதங் காணப்போதற்குத் தானும் தனக்குக் கூடுமவர்களுமாக 
			வேறு போயினான் என்றவாறு. இவன் போகவே, வினோதத்திற்குக் கூடும் 
			புத்திசேனனும் ஒழிந்தோரும் சீவகனைக் கூடினாராம். 
 
  | 
 
		  | 
 
	 
 
 
		
		 | 
 
		 
			   இவ்வாறு நச்சினார்க்கினியர் கூறுவதற்குக் காரணம் நீர் 
			விளையாட்டணியைச் சென்று காணுதல் சீவகனுக்குத் தகவன்று என்று 
			கருதியதாதல் வேண்டும். 
 
  | 
 
		  | 
 
	 
 
 
		
		 | 
 
		 
			   இனி, ‘இவை யின்னனவும் பிறவும‘ என்ற (சீவக. 933) செய்யுள் வரை நீர் 
			விளையாட்டணி காணுதல் கூறப்படும். 
 
  | 
 
		 
			( 66 )
 
  | 
 
	 
 
 
		
		 | 
 
	 
			 | 
			
			 |  
|  917 | 
ஒன்றே யுயிரை யுடையீ |  
|   | 
  ரொருவிப் போமி னிவள்க |  
|   | 
ணன்றே கூற்ற மாகி |  
|   | 
  யருளா தாவி போழ்வ |  
|   | 
தென்றே கலையுஞ் சிலம்பு |  
|   | 
  மிரங்க வினவண் டர்ப்பப் |  
|   | 
பொன்றோய் கொடியி னடந்து |  
|   | 
  புனல்சேர் பவளைக் காண்மின். | 
 
  
			 |  
 
	
 
 
		
		 | 
 
		 
			   (இ - ள்.) இவள்கண் அன்றே 
			கூற்றம் ஆகி அருளாது ஆவி போழ்வது? -இவள் கண்ணல்லவோ காலனாகி இரக்கம் 
			இன்றி உயிரைப் போக்குகின்றது?; ஒன்றே உயிரை உடையீர்! ஒருவிப் போமின் - 
			(ஆதலால்), சேமவுயிரின்றி ஓருயிரே உடையீர் நீங்கிப் போவீராக, என்றே 
			கலையும் சிலம்பும் இரங்க - என்று கூறுவன போலவே மேகலையும் சிலம்பும் 
			ஒலிக்க; இன வண்டு ஆர்ப்ப - கூட்டமாகிய வண்டுகள் ஆரவாரிக்க; பொன்தோய் 
			கொடியின் நடந்து - பொன்னுலகிற் பொருந்திய காமவல்லி போல நடந்து சென்று; 
			புனல் சேர்பவளைக் காண்மின்! - நீரில் இறங்குகின்றவளைக் காண்மின்! 
 
  | 
 
		  | 
 
	 
 
 
				
				
				
				
				 |