பக்கம் எண் :

                     
குணமாலையார் இலம்பகம் 546 

   (இ - ள்.) பாடு பாணிமுகம் எனும் பான்மையின் - அருகனாகமத்திற்கு கூறப்பட்ட, உயிர் செல்லும் முகங்களிற் பாணிமுகம் என்றும் கதியாலே ; ஓடி - சென்று; ஆங்கு ஓர் உயர்வரை உச்சிமேல் கூடி - ஆங்கு உயர்ந்த ஒப்பற்ற வெள்ளி மலைமேலே பொருந்தி; கோலம் குயிற்றி - அணியெல்லாம் புனைந்து; படம் களைந்து ஆடு கூத்தரின் - திரை நீக்கிவிட்டு ஆடும் கூத்தரைய போல; ஐ எனத் தோன்றினான் - வியப்புறத் தோன்றினான்.

 

   (வி - ம்.) பாணி - கை. பாணிமுகம் - கைம்முகம் ; சுட்டு விரலும் பெருவிரலும் நீங்கின இடம். அதன் வடிவம் (ட). அதுபோல நேரே ஓடிப் பின் விலங்கி ஓடுதலாம். நாயுடம்பு நீங்கிய உயிர் வெள்ளிமலையை அடைந்த கதியே பாணிமுகம். இக்கதி தேவருக்கும் மக்களுக்கும் உரியதென்பர். தத்துவார்த்த சூத்திரம் என்னும் நூலிற்கூறப்பட்டுள்ள தென்பர் இப்பொருள்.

( 98 )
949 ஞாயில் சூடிய நன்னெடும் பொன்னகர்க்
கோயில் வட்டமெல் லாங்கொங்கு சூழ்குழல்
வேயி னன்னமென் றோளியர் தோன்றியங்
காயி னார்பரி யாள மடைந்ததே.

   (இ - ள்.) ஞாயில் சூடிய நல் நெடும் பொன் நகர் - மதிலை உடுத்த அழகிய பெரிய பொன்னகரிலே; கோயில் வட்டம் அங்கு எல்லாம் - கோயில் உள்ள இடம் எல்லாம் ; கொங்கு சூழ்குழல் வேயின் அன்ன மென் தோளியர் தோன்றி ஆயினார் - மணஞ் சூழுங் குழலையும் வேயனைய மெல்லிய தோளையும் உடைய மகளிர் தோன்றித் தேவியர் ஆயினார்; பரியாளம் அடைந்தது - ஒழிந்த சுற்றமும் வந்தது.

 

   (வி - ம்.) ஞாயில் - மதிலுக்கு ஆகுபெயர். கொங்கு - மணம். வேயின் அன்ன என்புழி இன்சாரியை தவிர்வழி வந்தது. வேய் அன்ன என்க. பரியாளம் - பரிவாரம்.

( 99 )
950 மிடைந்த மாமணி மேகலை யேந்தல்குற்
றடங்கொள் வெம்முலைத் தாமரை வாண்முகத்
தடைந்த சாய லரம்பையர் தம்முழை
மடங்க லேறனை யான்மகிழ் வெய்தினான்.

   (இ - ள்.) மடங்கல் ஏறு அனையான் - சிங்கவேற்றைப் போன்றவன்; மிடைந்த மாமணி மேகலை ஏந்து அல்குல் - நெருங்கிய பெரிய மணிகளாலான மேகலை தாங்கிய அல்குலையும்; தடம்கொள் வெம்முலை - பெரிய விருப்பூட்டும் முலையினையும் ; தாமரை வாள் முகத்து - தாமரை யனைய ஒளி பொருந்திய முகத்தினையும்; அடைந்த சாயல் - பொருந்திய மென்மையையும் உடைய