பக்கம் எண் :

                     
குணமாலையார் இலம்பகம் 549 

   'உரிமை தன்னால் ஆட்டி' (மேற்படி-1169) 'எரிபொன்நீள் முடிகவித்தனன் பவித்திரற் றொழுதே' (மேற்படி-2366): 'தாளார ஏத்தி' (மேற்படி-3937); 'களிப்புற்றான்' (3685) என்று கூறுமவைகளான் இதுவே கருத்தாம். விளக்கத்தானும் மதியைத் தோற்றுவித்தலானும் பருதி யுவமை. இனி, மேனியனாய், மாலையனாய்ப் பருதியிடத்தே தோன்றினான் என்பாரும் உளர்.”

( 103 )

வேறு

 
954 குன்றெனத் திரண்ட தோளான்
  குறுகலுங் குமர னோக்கி
நின்றவ னெடுங்க ணொன்று
  மிமைப்பில நிழலில் யாக்கை
யன்றியுங் கண்ணி வாடா
  தமரனே யென்று தேறி
நன்றவன் வரவு கேட்பா
  னம்பி நீயாரை யென்றான்.

   (இ - ள்.) குன்று எனத் திரண்ட தோளான் குறுகலும் - மலைபோலத் திரண்ட தோளையுடைய சுதஞ்சணன் நெருங்குதலும்; குமரன் நோக்கி - சீவகன் பார்த்து; நின்றவன் நெடுங்கண் ஒன்றும் இமைப்பில் - இங்கு நின்றவனுடைய நீண்ட கண்கள் சிறிதும் இமைப்பிலவாயின!; நிழல் இல் யாக்கை - உடம்போ நிழலில்லாதது!; அன்றியும் கண்ணி வாடாது-மேலும் கண்ணியும் வாடலிலது; அமரனே என்று தேறி - (ஆதலால்) வானவனே என்று தெளிந்து; அவன் வரவு நன்று கேட்பான் - அவன் வரவை நன்றாக அறியவேண்டி; நம்பி! நீ யார்? என்றான் - நம்பியே! நீ யார்? என்று வினவினான்.

 

   (வி - ம்.) யாரை : ஐ; அசை. 'அமரனே ஆதல் தேறி' என்றும் பாடம்.

 

   தோளான் : சுதஞ்சணன். குமரன் : சீவகன். ஒன்றும் என்றது சிறிதும் என்னும் பொருள் குறித்துநின்றது. கண்ணிமையாமையும் உடற்கு நிழல்படாமையும் கண்ணிவாடாமையும் தேவர்கட்குரிய அடையாளங்கள். இவ்வுடலை ”வைக்கிரீக சரீரம்” என்று வழங்குப. நம்பி : அண்மை விளி.

( 104 )
955 குங்குமக் குவட்டின் வீங்கிக்
  கோலம்வீற் றிருந்த தோளா
யிங்குநின் னருளிற் போகி
  யியக்கரு ளிறைவ னாகிச்