பக்கம் எண் :

குணமாலையார் இலம்பகம் 557

(இ - ள்.) தேன் கொள் உவறு நீர் - இனிமை கொண்ட ஊற்று நீரில்; சிவிறியின் மாறு தூயும் - நெடுந்துருத்தியினால் மாறுகொண்டு தூவியும்; குங்குமம் எறிந்தும் - குங்குமத்தை மேலே வீசியும்; உழக்கி ஓட்டி உடைபுறம் கண்டு நக்கு - (நீரைக்) கலக்கி வெளியேற்றித் தோல்வி கண்டு நகைத்து; தவறு எனத்தாமம் பூட்டித் தரு திறை கொண்டும் - அஞ்சினாய் ஆகையால் தவறு செய்தாய் என்று கூறி மலர்மாலையாற் பிணித்துத் திறை பெற்றும்; ஏத்தருந் தன்மையார் - புகழ்தற்கரிய பண்பினார்; காம வெள்ளத்து இன்பத்து இவறினார் - (மேலும்) காம வெள்ள இன்பத்திலே மிகுந்தனர்.

(வி - ம்.) தரு திறை : புணர்ச்சியின்பம்.

சிவிறி - நீர் வீசுமொரு கருவி. தூயும் - தூவியும். மாறுதூவுதல் - ஒருவர்மேல் ஒருவர் எதிர்நின்று தூவுதல். உடைபுறம் - உடைதலானே காட்டப்படும் முதுகு. உவறு நீர் - ஊறும் நீர்; 'உவறு நீர் உயர் எக்கர்' என்றார் கலியினும் (136.) இவறுதல் - மிகுதல்.

( 116 )
967 சாந்தக நிறைந்த தோணி
  தண்மலர் மாலைத் தோணி
பூந்துகி லார்ந்த தோணி
  புனைகலம் பெய்த தோணி
கூந்தன்மா மகளிர் மைந்தர்
  கொண்டுகொண் டெறிய வோடித்
தாந்திரைக் கலங்கள் போலத்
  தாக்குபு திரியு மன்றே.

(இ - ள்.) கூந்தல் மா மகளிர் மைந்தர் கொண்டு கொண்டு ஓடி எறிய - கூந்தலையுடைய மகளிரும் ஆடவரும் சாந்து முதலியவற்றைக் கொண்டு ஓடி எறிதலால்; சாந்தகம் நிறைந்த தோணி - சாந்தைத் தன்னிடத்தே கொண்ட தோணியும்; தண்மலர் மாலைத் தோணி - குளிர்ந்த மலர்மாலை கொண்ட தோணியும்; பூந்துகில் ஆர்ந்த தோணி - பூவேலை செய்த ஆடை நிறைந்த தோணியும்; புனைகலம் பெய்த தோணி - அணிகலம் கொண்ட தோணியும்; தாம் - ஆகிய இவைகள்; திரைக் கலங்கள் போல - கடலிற் கலங்கள் போல; தாக்குபு திரியும் - தம்மில் தாக்கித் திரியும்.

(வி - ம்.) அன்று, ஏ : அசைகள்.

நீராட்டுவிழவிற்குவேண்டிய சாந்து முதலியவற்றை யுடையவாய் நீரிலே நின்ற பல்வேறு தோணிகளும் அவர்கள் நீராட்டின் எழுந்த அலைகளான் அலைப்புண்டு ஒன்றனோடொன்று தாக்கித் திரியும் என்றவாறு. தாக்குபு - தாக்கி.

( 117 )