பக்கம் எண் :

                               
குணமாலையார் இலம்பகம் 559 

கொண்ட மன்றல் ஒத்து - நிலமிசை வானவர்கொண்ட மணம் போல; ஓடிஇறந்தது - (அவ்விரு திறத்தாரும்) சோர்ந்த பிறகு நீர்விளையாட்டுக்) கழிந்தது.

 

   (வி - ம்.) வண்ண ஒண் சுண்ணம் - நன்னிறமும் ஒளியும் உடைய நறுமணப் பொடி. மீன்கள் மைந்தர்க்கும் நுடங்குமின் மகளிர்க்கும் உவமையாகக் கொள்க. மன்றல் - திருமணம். இந்நீராட்டு விழா தேவர் திருமண விழாப் போன்றிருந்தது என்பது கருத்து.

( 119 )

வேறு

 
970 உரைத்த வெண்ணெயு மொண்ணறுஞ் சுண்ணமு
மரைத்த சாந்தமு நானமு மாலையு
நுரைத்து நோன்சிறை வண்டொடு தேனின
மிரைத்து நீர்கொழித் தின்ப மிறந்ததே.

   (இ - ள்.) உரைத்த எண்ணெயும் - தேய்த்துக்கொண்ட எண்ணெயும்; ஒள் நறுஞ் சுண்ணமும் - சிறந்த சுண்ணப் பொடியும்; அரைத்த சாந்தமும் - அரைத்த சந்தனமும்; நானமும் மாலையும் - கத்தூரியும் மாலைகளுமாக; நுரைத்து - நுரை செய்து ; நோன்சிறை வண்டொடு தேன் இனம் இரைத்து - வலிய சிறகுகளையுடைய வண்டும் தேன் இனமும் முரன்று; கொழித்து - தெளிவுடையதாய்; நீர் இன்பம் இறந்தது - நீர் இனிமை மிகுந்தது.

 

   (வி - ம்.) உரைத்த முதலிய பெயரெச்சங்கள் செயப்படுபொருளன.

 

   உரைத்த - உரைக்கப்பட்ட; அரைத்த - அரைக்கப்பட்ட, நுரைத்து - நுரைக்கப்பட்டு, இரைத்து - இரைக்கப்பட்டென இவ்வெச்சங்களை செயப்பாட்டு எச்சங்ளாகக் கொள்க. இன்பம் இறந்ததே என்பதற்குத் தனது நலமிழந்தது எனலுமாம். என்னை? நீராடியபின் அந்நீர் உண்ணவும் ஆடவும் தகுதியற்றதாகும் என்பதே பரிபாடலினும் காணப்பட்டது ஆகலான் என்க.

 
  ”கழுநீர மஞ்சனக் குங்குமக் கலங்கல்
 
  வழிநீர் விழுநீர அன்று வையை”
 

   என்பது பரிபாடல்.

( 120 )

வேறு

 
971 கத்திகைக் கண்ணி நெற்றிக் கைதொழு கடவு ளன்ன
வித்தக விளைய ரெல்லாம் விழுமணிக் கலங்க டாங்கி
முத்தணிந் தாவி யூட்டி முகிழ் முலை கச்சின் வீக்கிப்
பித்திகைப் பிணையல் சூழ்ந்து பெண்கொடி பொலிந்த வன்றே.