பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 56 

   (இ - ள்.) கல் சுணம் செய்த தோள் மைந்தர் - கல் தூணைப் பொடிசெய்த தோளையுடைய ஆடவர்; காதலால் நல் சுணப்பட்டு உடைபற்ற - (மகளிர் புலந்து செல்லும்போது) தம் காதலால் அவர்களுடைய அழகிய சுண்ணம் கலந்த பட்டுடையைப் பற்ற ; நாணினால் பொற்சுணத்தால் விளக்கு அவிப்ப - அது நெகிழ்ந்த நாணத்தால் அம்மகளிர் அழகிய சுண்ணப் பொடியைக்கொண்டு விளக்கை அவிப்ப; பொங்கிய பொற்சுணம் புறம்பணை தவழும் பொற்பிற்று - மிகுந்த சிதறிய சுண்ணப் பொடி புறத்தே உள்ள மருதநிலத்தே பரவும் பொலிவினது அந்நகர்.

 

   (வி - ம்.) கல் - உலம் [தூண்]. சுண்ணப்பட்டு - சுண்ணம் அளைந்த பட்டு.

 

   'காதலார்' என்றும் பாடம்.

 

   நான்கிடத்தும் சுண்ணம் சுணம் என நின்றன. இது தொகுக்கும் வழித்தொகுக்கலாம். பொற்சுணத்தால் என்புழி ஆலுருபு ஐயுருபாகவும் அதன் பொருள் ஆகிய கருவி செயப்படுபொருளாயும் வந்தன. இதற்கு விதி ”உருபினும் பொருளினும் மேய்தடுமாறி இருவயின் நிலையும் வேற்றுமை எல்லாம் திரிபிடன் இலவே தெரியுமோர்க்கே” (தொல். வேற்றுமை மயங்கியல், 18) என்பதாம்.

( 62 )
92 நலத்தகு நானநின் றிடிக்கு நல்லவ
ருலக்கையால் உதிர்ந்தன தெங்கி னொண்பழ
நிலத்தவை சொரிதலின் வெரீஇய மஞ்ஞைபோய்க்
கலத்துயர் கூம்பின்மே லாடுங் கௌவைத்தே.

   (இ - ள்.) நலம் தகு நானம் இடிக்கும் நல்லவர் - விரும்பத் தகுகின்ற சுண்ணத்தை நின்று இடிக்கும் மகளிரின்; உலக்கையால் உதிர்ந்தன தெங்கின் ஒண்பழம் - உலக்கையால் கழன்றனவாகிய சிறந்த தெங்கின் பழங்களை; அவை நிலத்துச் சொரிதலின் - அம்மரங்கள் மடலில் தாங்கி நிலத்தில் விடுதலின்; வெரீஇய மஞ்ஞை போய் - அஞ்சிய மயில் ஓடிச்சென்று; கலத்து உயர் கூம்பின்மேல் ஆடும் கௌவைத்து - (அச்சம் நீங்கி) மரக்கலத்திலே உயரமான பாய்மரத்தின்மேல் ஆடும் ஆரவாரமுடையது அந்நகர்.

 

   (வி - ம்.) நலத்தகு : வியத்தகு என்றாற்போல நின்றது.

 

   நானம் : ஆகுபெயர்; அதிலே நனைத்திடித்தலின். [நானம் - புழுகு, இதன் பெயர் இதனில் நனைத்து இடிக்குஞ் சுண்ணத்திற்கு ஆயினமையின் சினையாகுபெயர்.] புகாரினது ஆழத்தால் நகரளவும் கலம் வந்தது; அரசன் விளையாடுதற்குச் சமைத்தனவும் ஆம்.

 

   புகார் : துறைமுகம்.

( 63 )