பக்கம் எண் :

குணமாலையார் இலம்பகம் 560

(இ - ள்.) கத்திகைக் கண்ணி நெற்றிக் கைதொழு கடவுள் அன்ன - குருக்கத்திக் கண்ணியணிந்த நெற்றியை உடைய, யாவருங் கைகுவித்துத் தொழும் முருகனைப் போன்ற; வித்தக இளையர் எல்லாம் விழுமணிக் கலங்கள் தாங்கி - திறமுடைய இளைஞர்கள் யாவரும் சிறந்த மணியணிகளைப் புனையவும்; பெண் கொடி - பெண் கொடிகள் எல்லாம்; ஆவி ஊட்டி - கூந்தலுக்கு அகிற்புகையூட்டி; முத்து அணிந்து முகிழ்முலை கச்சின் வீக்கி - முத்துமாலை அணிந்து, அரும்பனைய முலைகளைக் கச்சினால் இறுக்கி; பித்திகைப் பிணையல் சூழ்ந்து - பிச்சிமாலை புனைந்து; பொலிந்த - பொலிவுற்றன.

(வி - ம்.) கத்திகை . குருக்கத்தி மலர். கண்ணி-தலையிற் சூடும் மாலை. உலகெலாங் கை தொழுதற்குரிய கடவுள் என்க. கடவுள் ஈண்டு முருகன். வித்தகம் - சதுரப்பாடு. விழுமணி - சிறந்தமணி. தாங்கி என்னும் எச்சத்தைத் தாங்க எனத் திரித்துக் கொள்க. ஆவி - நறுமணப் புகை. பித்திகைப் பிணையல் - பிச்சிமலர் மாலை. பெண் கொடிகள் பல பொலிந்த எனப் பலவின்பால் முற்றுவினையைக் கூட்டுக.

( 121 )
972 திருந்துபொற் றேருஞ் செம்பொற்
  சிவிகையு மிடைந்து தெற்றிக்
கருங்கயக் களிறு மாவுங்
  காலியற் பிடியு மீண்டி
நெருங்குபு மள்ளர் தொக்கு
  நெடுவரைத் தொடுத்த வெள்ளங்
கருங்கடற் கிவர்ந்த வண்ணங்
  கடிநகர்க் கெழுந்த வன்றே.

(இ - ள்.) திருந்து பொன் தேரும் - அழகிய பொற்றோரும்; செம்பொன் சிவிகையும் - செம் பொன்னாலான பல்லக்கும் ; மிடைந்து தெற்றி - நெருங்கிப் பிணங்கி; கருங்கயக் களிறும் - கரிய பெரிய களிறுகளும் ; கால்இயல் பிடியும் - காற்றெனச் செல்லும் பிடியும் ; மாவும் நெருங்குபு - புரவிகளுமாக நெருங்கி; மள்ளர் தொக்கு - வீரர் குழுமி ; நெடுவரைத் தொடுத்த வெள்ளம் - பெரிய மலையினின்றும் இடையறாது பெறுகும் வெள்ளம்; கருங்கடற்கு இவர்ந்த வண்ணம் - கரிய கடலை நோக்கிச் சென்றாற் போல; கடிநகர்க்கு எழுந்த - காவலையுடைய நகருக்குப் போயின.

(வி - ம்.) தெற்றுதல் - செறிதல். கருங்கயக்களிறு என்புழி கய உரிச்சொல்; பெருமைப் பண்பு குறித்து நின்ற. மா - குதிரை. கால் - காற்று, நெருங்குபு - நெருங்கி. வெள்ளம் - நீராடிமீளும் குழுவிற் குவமை, கருங்கடல் - நகரத்திற்குவமை.

( 122 )