பக்கம் எண் :

குணமாலையார் இலம்பகம் 561

வேறு

   
973 கடலெனக் காற்றெனக் கடுங்கட் கூற்றென
வுடல்சின வுருமென வூழித் தீயெனத்
தொடர்பிணி வெளின்முதன் முருக்கித் தோன்றிய
தடலருங் கடாக்களிற் றசனி வேகமே.

   (இ - ள்.) கடல் என - முழக்காற் கடல்போலவும்; காற்று என - விரைவாற் காற்றெனவும்; கடுங்கண் கூற்று என - கொடுமையால் கூற்றுவன் நிகர்ப்பவும்; உடல் சின உரும் என - வருத்தும் சினத்தால் இடி யேய்ப்பவும்; ஊழித் தீ என - ஒன்றாக அழித்தலின் ஊழித்தீ யொப்பவும்; அடல் அருங்கடாக் களிற்று அசனி வேகம் - கொல்லற்கரிய மதகளிறாகிய அசனிவேகம்; தொடர்பிணி வெளில் முதல் முருக்கி - காலிற் சங்கிலி பிணித்த மரத்தையும் கம்பத்தையும் அடியிலே முறித்து; தோன்றியது - வெளிப்பட்டது.

  

   (வி - ம்.) கடல் முதலிய உவமைகட்கு முழக்கம் முதலிய பொதுத் தன்மைகள் விரித்துக் கொள்க. உடல் சினம் : வினைத்தொகை. உடலுதல் - மாறுபடுதல். உரும் - இடி. ஊழித்தீ - ஊழிக்காலத்தே தோன்றி உலகினை அழிக்கும் நெருப்பு. தொடர் - சங்கிலி. வெளில் - தறி. அசனிவேகம் - கட்டியங்காரன் பட்டத்தியானை. களிற்றசனி வேகம் என்புழி உயிர்த்தொடர் றகரவொற்று அல்வழிக்கண் இரட்டிற்று.

( 123 )

 
974 பொருதிழி யருவி போன்று
  பொழிதரு கடாத்த தாகிக்
குருதிகொண் மருப்பிற் றாகிக்
  குஞ்சரஞ் சிதைந்த தென்னக்
கருதிய திசைக ளெல்லாங்
  கண்மிசைக் கரந்த மாந்தர்
பருதியின் முன்னர்த் தோன்றா
  மறைந்தபன் மீன்க ளொத்தார்.

 

 

   (இ - ள்.) குஞ்சரம் பொருது இழி அருவி போன்று - அக்களிறு, மலையிடைப் பொருது விழும் அருவி போல; பொழி தரு கடாத்தது ஆகி - சொரியும் மதமுடையதாய்; குருதி கொள் மருப்பிற்று ஆகி - செந்நீர் பயின்ற கொம்புடையதாய்; சிதைந்தது என்ன - தன் பண்பு கெட்டது என்று அதனைக் கண்டவர் கூக்குரலிட்டாராக; கருதிய திசைகள் எல்லாம் கண்மிசைக் கரந்த மாந்தர் - அக்களிற்றின் கண்கள் நோக்குந் திக்கெல்லாம் அதன் கண்ணிடத்தே தோன்றாமல் மறைந்த மக்கள்