பக்கம் எண் :

                       
குணமாலையார் இலம்பகம் 574 

   (இ - ள்.) பூமியும் பொறை ஆற்ற அருந்தன்மையால்-புவியும் பொறுமையைச் செலுத்தற்கியலாத தன்மையாலே; வேள்வி முளரிபோல் என் நெஞ்சமும் வேம் - வேள்வித் தீயில் இட்ட தாமரை மலர்போல என் உள்ளமும் வேகும்; தாம மார்பனைச் சீவகசாமியைக் காமனை - மாலை மார்பனும்; சீவகனும் ஆகிய காமனை; தேவிர்காள்! கடிதே தம்மின்! - வானவர்களே! விரைய நல்குமின்!

 

   (வி - ம்.) 'வேம்' என்னும் துணையும் காதல் கைம்மிகல்; (தொல். மெய்ப். 23-பேர்) காமம் கையிகந்த வழி நிகழும் ஆதலின்; 'உள்ளின் உள்ளம் வேமே' (குறுந். 102) என்பது உதாரணம். தம்மின்' என்பது தூதுழனிவின்மைப் பாற்படும் (தொல். மெய்ப். 23-பேர்) ; 'கானலும் கழறாது' (அகநா. 170) என்பது

 

   உதாரணம். அறன் அளித்துரைத்தல் (தொல். மெய்ப். 22-பேர்) எனினும் ஆம்.

( 146 )
997 கையி னாற்சொலக் கண்களிற் கேட்டிடு
மொய்கொள் சிந்தையின் மூங்கையு மாயினேன்
செய்த வம்புரி யாச்சிறி யார்கள்போ
லுய்ய லாவதொர் வாயிலுண் டாங்கொலோ.

   (இ - ள்.) மொய்கொள் சிந்தையின் - (பிறர்க்குக் கூறலாகாத குறைகள்) செறிதல் கொண்ட உள்ளத்தினால்; செய்தவம் புரியாச் சிறியார்கள்போல் - செய்யக்கடவ தவம் புரியாத அறிவிலார்கள்போல; கையினால் சொலக் கண்களின் கேட்டிடும் - கையாற் கூறிக் கண்ணாற் கேட்கும்; மூங்கையும் ஆயினேன் - ஊமையும் ஆனேன்; உய்யல் ஆவதொர் வாயில் உண்டாம் கொலோ? - பிழைக்கலாவதாகிய ஒரு வாயிலும் உண்டாகுமோ?

 

   (வி - ம்.) 'மூங்கையும் ஆயினேன்' என்பது சிதைவு பிறர்க்கின்மை (தொல். மெய்ப். 13-பேர்) ; புறத்தார்க்குப் புலன் ஆகாமை நெஞ்சில் நிறுத்தலின். வாயில் - கூட்டுவார்.

( 147 )
998 கண்ணும் வாளற்ற கைவளை சோருமாற்
புண்ணும் போன்று புலம்புமென் நெஞ்சரோ
வெண்ணில் காம மெரிப்பினு மேற்செலாப்
பெண்ணின் மிக்கது பெண்ணல தில்லையே.

   (இ - ள்.) கண்ணும் வாள் அற்ற - கண்களும் ஒளியிழந்தன; கைவளை சோரும் - கைவளையல்கள் கழலும்; என் நெஞ்சம் புண்போன்று புலம்பும் - என் மனமும் புண்ணென வருந்தும்; எண் இல் காமம் எரிப்பினும் - எல்லையற்ற காமம் சுடினும் ; மேற்செலாப் பெண்ணின் - (மடலூர்தல் முதலியவற்றிற்கு) நடவாத பெண்ணினத்தினும்; மிக்கது பெண் அலது இல்லை - கொடுமை மிக்கது பெண்ணல்லதில்லையாயிருந்தது.