பக்கம் எண் :

                     
குணமாலையார் இலம்பகம் 576 

   (இ - ள்.) செய்ய வாய்க் கிளியே ! - சிவந்த வாயையுடைய கிளியே !; சிறந்தாய் ! - சிறப்புடையாய்!; உன்னை அலால் இலேன் - உன்னையொழிய வேறொரு வாயிலும் இலேன்; உய்யும் ஆறு உரையாய் என - யான் பிழைக்கும் வழியை உரைப்பாய் என்றாளாக; நங்கை - நங்கையே!; தையலாய் - தையலே!; நையல் - வருந்தற்க; இந் நாட்டகத்து உண்டு எனின் - நீ விரும்பியது இந்த நாட்டிலே யிருப்பின்; சமழாது உரை என்றது - வருந்தாமற் கூறுக என்று கிளி கூறியது.

 

   (வி - ம்.) தாய் தந்தையினுஞ் சிறந்தாய் என்றாள், அவர்க்குக் கூறலாகாதவற்றை இதனிடம் கூறுதலின்.

( 150 )
1001 தெளிக யம்மலர் மேலுறை தேவியி
னொளியுஞ் சாயலு மொப்புமை யில்லவள்
களிகொள் காமத்திற் கையற வெய்தித்தன்
கிளியைத் தூதுவிட் டாள்கிளந் தென்பவே.

   (இ - ள்.) தெளி கயம் மலர்மேல் உறை தேவியின் - தெளிந்த பதுமை யென்னும் கயத்தில் தாமரை மலரில் வாழும் திருமகளினும்; ஒளியும் சாயலும் ஒப்புமை இல்லவள் - ஒளியும் மென்மையும் வேறொப்புமை இல்லாத குணமாலை; களிகொள் காமத்தின் கையறவு எய்தி - மயக்கங்கொண்ட காமத்தாலே செயலறுதல் பொருந்தி; தன் கிளியைக் கிளந்து - தன் கிளியினிடம் தன் வருத்தத்தை வெளிப்படையாக எடுத்துக் கூறி; தூதுவிட்டாள் - அதனைத் தூதாக விடுத்தாள்.

 

   (வி - ம்.) கயம் - பதுமை என்னும் குளம். மலர் மேலுறைதேவி திருமகள். தேவியின் என்புழி இன் உறழ்பொருள். சாயல் - மென்மை - ஒளிக்கும் சாயலுக்கும் தேவியல்லது பிறர் ஒப்பாகாதவள் என்க. களி - மகிழ்ச்சி. கையறவு - செயலறவு. கிளந்து - கூறி.

( 151 )
1002 பூணொ டேந்திய வெம்முலைப் பொன்னனா
ணாணுந் தன்குல னுந்நலங் கீழ்ப்பட
வீணை வித்தகற் காணிய விண்படர்ந்
தாணுப் பைங்கிளி யாண்டுப் பறந்ததே.

   (இ - ள்.) பூணொடு ஏந்திய வெம்முலைப் பொன்னனாள் - பூணைச் சுமந்து நிமிர்ந்த விருப்பம் ஊட்டும் முலைகளையுடைய திருவனையாளின்; தன்நாணும் குலம் நலனும் கீழ்ப்பட-நாணமும் குலனும் நன்மை குறைய அவளுடைய வேட்கையை அறிவிக்க; வீணை வித்தகன் காணிய - சீவகனைக் காண்தற்கு; ஆணுப் பைங்கிளி - நட்புடையதான பசுங்களி; விண்படாந்து ஆண்டுப் பறந்தது - விண்ணிலே சென்று அவனிருக்கும இடம் அடையப் பறந்தது.