பக்கம் எண் :

                         
குணமாலையார் இலம்பகம் 587 

   வேழம் - விளம்பழத்திற் குண்டாகுமொரு நோய். அஃது அவ்வேழத்திற்குரிய வெஞ்சினமென்னும் அடையேற்றது. நெட்டிலை வஞ்சிக்கோ என்றாற்போன்று. வெள்ளில் - விளாம்பழம். துவலை - துளி. தத்தை - கிளி : விளியேற்று நின்றது.

( 174 )

வேறு

 
1025 பூவணை யழலின்மேற் சேக்கும் பொன்செய்தூண்
பாவைதான் பொருந்துபு நிற்கும் பற்பல்கா
லாவியா வழலென வுயிர்க்கு மையென
மேவிப்பூ நிலமிசை யிருக்கு மெல்லவே.

   (இ - ள்.) பாவைதான் பூ அணை அழலின் மேல் சேக்கும் - என் தலைவி மலரணை ஆகிய நெருப்பின் மேல் தங்குவாள்; பொன் செய்தூண் பொருந்துபு நிற்கும் - பொன்னாலாகிய தூணைச் சார்ந்து நிற்பாள்; பற்பல்கால் ஆவியா அழல் என உயிர்க்கும் - பலமுறை கொட்டாவி விட்டு நெருப்புப்போல மூச்செறிவாள்!; ஐ எனப் பூ நிலமிசை மேவி மெல்ல இருக்கும் - ஐயென வருந்தித் தரையிலே சென்று மெல்ல அமர்வாள்.

 

   (வி - ம்.) ஐ : வருத்தக் குறிப்பு.

 

   பூவணை அழலிற் சேக்கும் என்றது அவட்குப் பூவணைமேலிருத்தல் தீமேல் இருப்பது போல்வதாயிற்று என்னும் கருத்துடையது. ஆவியா - ஆவித்து: செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். ஆவித்தல் - கொட்டாவி விடுதல். பூநிலம் : இருபெயரொட்டு.

( 175 )
1026 பணித்தகு கோலமும் பந்தும் பார்ப்புறாண்
மணிக்கழங் காடலண் மாமைதான் விளர்த்
தணித்தகை யாழினோ டமுதம் விட்டொழீஇத்
துணைப்பெரு மலர்க்கணிற் றுயிலு நீங்கினாள்.

   (இ - ள்.) பணித்தகு கோலமும் பந்தும் பார்ப்புறாள் - பிறரைத் தாழ்விக்கத்தக்க கோலத்தைப் புனைந்துகொள்ளாள், பந்தும விளையாடாள்; மணிக் கழங்கு ஆடலள் - மணிகளாற் செய்த கழங்கையும் ஆடாள்; மாமைதான் விளர்த்து - அவளுடைய பொன்மேனி வெளுத்து; அணித்தகை யாழினோடு அமுதம்விட்டு ஒெரீஇ - அணியத்தக்க யாழையும் உணவையும் விட்டு நீங்கி; துணைப்பெரு மலர்க்கணில் துயிலும் நீங்கினாள் - பெரிய இரண்டு மலரனைய கண்களில் துயில்வதையும் விட்டாள்.

 

   (வி - ம்.) பந்தும் என்பதற்கு கேற்ப விளையாடாள் என வருவித்தோதுக. மணிக்கழங்கு - மணியாற்செய்த கழற்சிக்காய். மாமை-நிறம். அமுதம் - உணவிற்கு ஆகுபெயர்.

( 176 )