பக்கம் எண் :

                   
குணமாலையார் இலம்பகம் 594 

   வாராரோ என்றையுற்றவர் விரலால் வட்டமாகக் கோடு கிழித்து அக்கோட்டின் இருமுனைகளும் ஒன்று கூடியவிடத்து வருவர் என்றும் கூடாமல் விலகியவழி வாரார் என்றும் துணிதல் என்க.

( 187 )
1038 பாகவரை வாங்கிப் பழுதாகிற் பாவியேற்
கேகுமா லாவி யெனநினைப்பப் பைங்கிளியார்
மாகமே நோக்கி மடவாளே யவ்விருந்தா
ளாகும்யான் சோ்வ லெனச்சென் றடைந்ததே.

   (இ - ள்.) பாகவரை வாங்கி - (அங்ஙன மிழைப்பவள்) பாதிவரையில் வளைத்து; பழுதாகின் பாவியேற்கு ஆவி ஏகும் - இது கூடாதாயின் பாவியேனுக்கு உயிர் நீக்கும்; என நினைப்ப - என்றெண்ணிக் (கூடற்சுழியை முடியாமலே வானிற் கிளி வரவை நோக்கி வாளா இருப்ப); மாகமே நோக்கி - வானையே நோக்கி ; அவ்விருந்தாள் யார்? மடவாளே ஆகும் - அங்கிருந்தாள் யார்? (வேறுபட்ட தோற்றத்தோடிருப்பினும் வேறொருத்தி இங்கிராள் ஆகையால்) குணமாலையே ஆவாள்; யான் சேர்வல் என - யான் இனி அவளிடஞ் செல்வேன் என எண்ணி ; பைங்கிளி சென்று அடைந்தது - பசுங்கிள்ளை போய்ச் சேர்ந்தது.

 

   (வி - ம்.) 'குணமாலை மாகமே நோக்கியும் கன்னிமாடத்திலும் இருந்ததால், மெய்வாடி, வேறுபட்ட தோற்றத்தோடிருப்பினும் கிளி அறிந்தது' எனக் குணமாலையின் காதல் நிலை கூறியவாறு. தான் போனபின்புள்ள வேறுபாட்டால் ஐயுற்றாலும் வருத்த மிகுதி கண்டு கிளி தெளிந்தது.

( 188 )
1039 கண்டா ணெடிதுயிர்த்தாள்
  கைதொழுதாள் கையகத்தே
கொண்டா டினைக்குரறான்
  சூடினாள் தாழ்குழன்மே
னுண்டார்ப் பசுங்கிளியை
  நோவ அகட்டொடுக்கி
வண்டாரான் செவ்விவாய்க்
  கேட்டாடன் மெய்ம்மகிழ்ந்தாள்.

   (இ - ள்.) கண்டாள் - (தன்னை அணுகின கிளியைக்) கண்டாள் ; நெடிது உயிர்த்தாள் - (இது என்னுரைக்குமோ என்று) பெருமூச் செறிந்தாள்; கைதொழுதாள் - (கிளியின் வாயில் தினைக்கதிரைக் கண்டு அதிலே ஓலையிருக்கும் என்று துணிந்து) கைகுவித்து (நல்லூழை) வணங்கினாள்; கையகத்தே தினைக்குரல் கொண்டாள் - கையிலே தினைக்கதிரை வாங்கிக் கொண்டாள்; தாழ்குழல் மேல் சூடினாள் - நீண்ட கூந்தலிலே