பக்கம் எண் :

                   
குணமாலையார் இலம்பகம் 597 

1043 குங்குமஞ்சோ் வெம்முலைமேற்
  கொய்தார் வடுப்பொறிப்பச்
செங்கயற்கண் வெம்பனியாற்
  சிந்தை யெரியவித்து
மங்கை மகிழ
  வுறையேனேல் வாளமருட்
பங்கப்பட் டார்மேற்
  படைநினைந்தே னாகென்றான்.

   (இ - ள்.) கொய்தார் குங்குமம்சேர் வெம்முலைமேல் வடுப்பொறிப்ப - (என்) மாலை தன்னுடைய குங்குமம் அணிந்த விருப்பூட்டும் முலையின்மேல் வடுவாய் அழுந்துமாறு; செங்கயல்கண் வெம்பனியால் சிந்தை எரி அவித்து - (யான் முயங்குதலிற் பிறந்த) சிவந்த கயற்கண்ணிலிருந்து பிறந்த உவகைக் கண்ணீராற் சிறிது தணிந்த காமத் தீயை அவித்து; மங்கை மகிழ உறையேனேல் - அவள் என் அன்புடைமைக்கு மகிழுமாறு அவளுடன் உறைந்திலேன் எனின்; வாள் அமருள் பங்கப்பட்டார்மேல் படை நினைந்தேன் ஆக என்றான் - வாட் போரிலே அஞ்சினார் மேலே படைவிட எண்ணினேன் ஆகக்கடவேன் என்றொழுதியிருந்தான்

 

   (வி - ம்.) 'வெம்பனி' என்றான், புணர்ந்தாலன்றி முயக்கத்தால் மட்டும் உண்ணிறை வெப்பம் முழுதும் தீராதென்று. பங்கப்படுதல் - இமைத்தல், திடுக்கிடல் முதலியன.

 

   'ஆகென்றான்' என்பதனைத் தொழிற்பெயர் (வினையாலணையும் பெயர்) எனக் கொண்டு அடுத்த செய்யுளில் 'நுண்வரிகள்' என்பதற்கு எழுவாயாக்குவர் நச்சினார்க்கினியர்.

( 193 )
1044 நூல்புடைத்தாற் போற்கிடந்த வித்தகஞ்சோ் நுண்வரிகள்
பான்மடுத்துத் தீந்தேன் பருகுவாள் போனோக்கிச்
சேல்படுத்த கண்ணீர் சுமந்தளைஇ மெய்ம்மகிழ்ந்து
மால்படுத்தான் மார்பின் மணந்தாளே போன்மகிழ்ந்தாள்.

   (இ - ள்.) நூல்புடைத்தால் போன்று - நூல் எற்றினாற் போல; இனிய வித்தகம் சேர் நுண்வரிகள் - இனிய திறமை பொருந்திய நுண்ணிய எழுத்தின் வரிகளை; பால் மடுத்துத் தீந் தேன் பருகுவாள்போல் நோக்கி- பாலிலே கலந்து இனிய தேனைப் பருகுவாள் போல இனிமையுற்றுப் படித்து; அளைஇ சேல்படுத்த கண்ணீர் சுமந்து மெய்ம்மகிழ்ந்து - உவகை கலந்து சேலை வென்ற கண்களில் நீர் நிறைய உடம்பு குளிர்ந்து; மால்படுத்தான் மார்பில் மணந்தாளேபோல் மகிழ்ந்தாள் - மயக்கத்தை உண்டாக்கினவன் மார்பிலே கலந்தவளைப்போல இனிமையுற்றாள்.