பக்கம் எண் :

                     
குணமாலையார் இலம்பகம் 598 

   (வி - ம்.) வித்தகம் - உறுப்புமாம். மடுத்து - கலந்து. மால்படுத்தான் - தன்னைக் காம மயக்கத்துட்படுத்தவனாகிய சீவகன்.

( 194 )
1045 பாலவியும் பூவும் புகையும் படுசாந்துங்
காலவியாப் பொன்விளக்குந் தந்தும்மைக் கைதொழுவேன்
கோலவியா வெஞ்சிலையான் சொற்குன்றா னாகெனவே
நூலவையார் போனீங்க ணோக்குமினே யென்றாள்.

   (இ - ள்.) பால் அவியும் - பாற்சோறும் ; பூவும் - மலரும் ; புகையும் - மணப்புகையும்; படுசாந்தும் - அரைத்த சாந்தும் ; கால் அவியாப் பொன் விளக்கும் - காற்றில் அவியாத மாணிக்க விளக்கும்; தந்து உம்மைக் கைதொழுவேன் - படைத்து உங்களைக் கைகூப்பி வணங்குவேன் ; கோல் அவியா வெஞ்சிலையான் சொல் குன்றான் ஆக எனவே - அம்பு மாறாமல் எய்தற்குரிய கொடிய வில்லான் (நும்மை நீங்காது ஒற்றுமைப்படக் கூறிய) சொற்குன்றன் ஆகுமாறு; நூல் அவையார்போல் நீங்கள் நோக்கு மின் எனற்ள் - அறநூல் உணர்ந்த அவையோர்களை (நீங்கள் சொற்குன்றாமல் நோக்குதல்) போல அச்சொற்களுக்கு இடையூறின்றி ஆகவென்றே கருதி நோக்குங்கள் என்று வேண்டினாள்.

 

   (வி - ம்.) நீங்கள் என்றது எழுத்துக்களை ; அவற்றின் தன்மையும் வடிவும் ஆசிரியர்க்கல்லது உணரலாகாமையின், நூலில் விளங்கக் கூறிற்றிலரேனும் சமய நூல்களிற் கூறுதலின், அவ்வெழுத்துக்களைத் தெய்வம் என்றே கொள்க.

( 195 )

வேறு

 
1046 மவ்வலங் குழலி னாளை மதியுடம் படுக்க லுற்றுச்
செவ்வியுட் செவிலி சொல்லுஞ் சிலையிவர் நுதலி னாய்நின்
னவ்வைக்கு மூத்த மாம னொருமகற் கின்றுன் றாதை
நவ்வியம் பிணைகொ ணோக்கி நகைமுக விருந்து செய்தான்.

   (இ - ள்.) மவ்வல் அம் குழலினாளை மதி உடம்படுக்கல் உற்று - முல்லை மலர் அணிந்த கூந்தலாளாகிய குணமாலையை, அவள் அறிவை அறிய எண்ணி ; செவ்வியுள் செவிலி சொல்லும் - அதற்கேற்பச் செவிலி செப்புவாள்; சிலை இவர் நுதலினாய்! - வில்லென விளங்கும் புருவத்தாய் ; நவ்வி அம்பிணை கொள் நோக்கி - பெண்மானின் நோக்கைக் கொண்டவளே!; நின் அவ்வைக்கு மூத்த மாமன் ஒரு மகற்கு - நின் அன்னைக்கு முன் பிறந்தவனும் நினக்கு மாமனும் ஆவானுடைய ஒப்பில்லாத மகனுக்கு ; இன்று உன் தாதை நகைமுக விருந்து செய்தான் - இன்று உன் தந்தை நகைமுகமாகிய விருந்தை யிட்டான்.