பக்கம் எண் :

                 
குணமாலையார் இலம்பகம் 600 

வன்; உனது நாமம் அல்லது ஒன்று உரைத்தல் தேற்றான் - உன் பெயரை யன்றி உரைத்தல் அறியாதவன் ; இத் திறத்து இவன்கண் - இக் கூறுபாடுகளையுடைய இவனிடத்தே ; நின்னை எண்ணினார் என்னலோடும் - நின்னைக் கொடுக்க நினைத்தனர் என்ற அளவிலே ; தத்தை அம் கிளவி - கிளிமொழியாள் ; கையால் செவிமுதல் அடைச்சிச் சொன்னாள் - கைகளினாலே செவிகளைப் புதைத்து ஒருமொழி உரைத்தாள்.

 

   (வி - ம்.) மைத்துனன் என்றது மேலும் நின்னை மணத்தற்கும் உரிமையுடையன் என்பதுபட நின்றது. இதன்கண் மணமகன்பால் பெண்ணின் தந்தை விரும்பும் வித்தையுடைமை உத்தமன் என்றதனானும், தாய் விரும்பும் தனம் வளர்நிதிக் கிழவன் காளை என்றதனானும், சுற்றம் விரும்பும் குலம் மைத்துனன் என்றதனானும், பெண் விரும்பும் அழகு வனப்பின்மிக்கான் என்றதனானும் போந்தமை உணர்க.

( 198 )
1049 மணிமதக் களிறு வென்றான்
  வருத்தச்சொற் கூலி யாக
வணிமதக் களிற னானுக்
  கடிப்பணி செய்வ தல்லாற்
றுணிவதென் சுடுசொல் வாளாற்
  செவிமுத லீர லென்றாள்
பணிவரும் பவளப் பாவை
  பரிவுகொண் டனைய தொப்பாள்.

   (இ - ள்.) பணிவரும் பவளப்பாவை பரிவுகொண்டனையது ஒப்பாள் - பணிவித்தற்கு அரிய பவளப்பாவை வருத்தங்கொண்ட தன்மை போன்றாள் ; மணிமதக் களிறு வென்றான் வருத்தச் சொல் கூலி ஆக - கட்டுமணியையுடைய மதயானையை வென்றவன் 'கொண்டுய்யப் போமின்' (சீவக. 981) என்ற பரிவுமொழிக்குக் கூலியாக; அணி மதக்களிறு அனானுக்கு அடிப்பணி செய்வது அல்லால் - அழகிய மதயானை போன்ற அவனுக்கு அடித்தொண்டு செய்தல் அன்றி; துணிவது என் ?- வேறு கொடுக்கத் துணிவது எதற்கு ?; சுடுசொல் வாளால் செவிமுதல் ஈரல் என்றாள் - (இவ்வாறு) சுடுசொல்லாகிய வாளாலே செவியிடத்தைப் பிளவற்க என்றுரைத்தாள்.

 

   (வி - ம்.) 'அடிச் செருப்பாவதல்லால்' என்றும் பாடம்.

 

   வருத்தச் சொல் - பரிவினைக் காட்டுஞ்சொல்; அஃதாவது ”கோற்றொடிப்பாவை தன்னைக் கொண்டுயப் போமின்” என்று (981) தன் பொருட்டு முன்னர்ச் சீவகன் கூறிய சொல். சுடுசொல் - உள்ளத்தைச் சுடுவதுபோன்று வருத்துங் கொடுஞ்சொல் ; அது 'நின்னை எண்ணினார்' என்ற செவிலி சொல்.

( 199 )