பக்கம் எண் :

               
குணமாலையார் இலம்பகம் 617 

   (இ - ள்.) ஈண்டு அழல் குட்டம்போல - (அதுகேட்ட அரசன்) செறிந்த நெருப்புக் குண்டம்போல ; எரி எழத் திருகி நோக்கி - அனல் எழச் சினந்து நோக்கி ; கோண்தரு குறும்பர் வெம்போர் - மாறுபடும் வேடருடன் செய்த கொடுஞ் சமரையும்; கோககுழாம் வென்றது - அரசர் கூட்டத்தை வென்றதையும்; உள்ளி - நினைத்து; மாண்டது இல் செய்கை செய்த - தகுதியற்றதாகிய செயலை (என்னுடன் மாறுபடுதலை)ச் செய்த ; வாணிகன் மகனை - செட்டி மகனை; வல்லே ஆண்திறம் களை வென் - இப்பொழுதே ஆண்மைச் செருக்கை ஒழிப்பேன் ; ஓடிப் பற்றுபு தம்மின் என்றான் - ஓடிக் கைக்கொண்டு தாரும் என்றான்.

 

   (வி - ம்.) பின்னர்த் தாம் கருதிய பொருளை நிறுவ நினைத்த நச்சினார்க்கினியர் ஈண்டு, ”அர்சன் ஏவல் செய்ய வேண்டுதலின், ' பற்றுபு தம்மின்' என்று கூறவே, அவர் கட்டினாரென்றல் பொருந்தாமை உணர்க” என்கின்றனர்.

( 229 )
1080 கன்றிய வெகுளி வேந்தன்
  கால்வலி யிளையர் காய்ந்து
கொன்றுயிர் கொணர வோடுங்
  கொழுங்குடர்க் கண்ணி மாலை
யொன்றிய வுதிரச் செச்சை
  யொண்ணிண மீக்கொ டானைத்
தென்றிசைக் கிறைவன் றூதிற்
  செம்மலைச் சென்று சோ்ந்தார்.

   (இ - ள்.) கன்றிய வெகுளி வேந்தன் - தழும்பேறிய சீற்றங்கொண்ட மன்னனுடைய ; கால்வலி இளையர் காய்ந்து - நடை வல்ல ஏவலர் சினந்து ; கொன்று உயிர்கொணர ஓடும் - கொன்று உயிரைக் கொண்டுவர ஓடுகின்ற; கொழுங்குடர்க் கண்ணிமாலை - கொழுவிய குடரைக் கண்ணியாகவும் மாலையாகவும் கொண்டு; ஒன்றிய உதிரச் செச்சை - பொருந்திய குருதியைச் சட்டையாக அணிந்து ; ஒள் நிணம் மீக்கொள் தானை - ஒள்ளிய நிணத்தை மேலே ஆடையாகக் கொண்ட; தென் திசைக்கு இறைவன் தூதின் - கூற்றுவனுடைய தூதரைப் போல; சென்று செம்மலைச் சேர்ந்தார் - போய்ச் சீவகனிருப்பிடத்தை அடைந்து சூழ்ந்தனர்.

 

   (வி - ம்.) கன்றுதல் - முதிர்தல்; காழ்ப்பேறுதல், கால் - காற்றுமாம். தென்றிசைக் கிறைவன்: கூற்றுவன். செம்மல் - சீவகன். கட்டியங்காரனைக் கூற்றுவனாகவும் ஏவலர்களை உயிர்கொண்டு ஓடும் கூற்றுவன் தூதராகவும் சீவகனை உயிராகவும் கொள்க.

( 230 )