பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 62 

   (இ - ள்.) எங்கும் திரிந்து செம்பு உருகு வெங்களிகள் உமிழ்வ - எவ்விடத்துந் திரிந்து செம்புருகின நீரை உமிழ்வனவும்; வெம்பு உருகு வட்டு உமிழ்வ - பகைவர் வேதற்குக் காரணமான உருகு வட்டை உமிழ்வனவும்; வெம்நெய் முகந்து உமிழ்வ - வெப்பமான நெய்யை அள்ளிச் சொரிவனவும்; அம்பு உமிழ்வ வேல் உமிழ்வ கல் உமிழ்வ ஆகி - அம்புகளையும் வேல்களையும் கற்களையும் உமிழ்வனவாக; யவனர்தம் புலங்களால் தாள்படுத்த பொறி - யவனர்கள் தங்கள் அறிவின் திறங்களால் அமைத்த பொறிகளும்;

 

   (வி - ம்.) ஆகி - ஆக. புலம் - அறிவு.

 

   யவனர் - யவனநாட்டிலிருந்து வந்துள்ள தச்சர். இவர்கள் பொறிகள் இயற்றுவதில் திறமுடையோர்கள். பெருங்கதையின்கண் யவனத் தச்சன் ஒருவன் யூகிக்குப் பொறித்தேர் கொடுத்தமை இலாவாண காண்டத்துக் காணப்படுகின்றது.

( 74 )
104 கரும்பொனியல் பன்றிகத நாகம்விடு சகடங்
குரங்குபொரு தகரினொடு கூர்ந்தரிவ நுண்ணூல்
பரந்தபசும் பொற்கொடிப தாகையொடு கொழிக்குந்
திருந்துமதி றெவ்வர்தலை பனிப்பத்திருந் தின்றே.

   (இ - ள்.) கரும்பொன் இயல் பன்றி - இரும்பாற் செய்யப்பட்ட பன்றிப் பொறிகளும்; கத நாகம் - சினமிகும் நச்சரவுப் பொறிகளும்; விடு சகடம் - விடப்பெறும் ஆழிப்பொறிகளும்; குரங்கு பொரு தகரினொடு - குரங்கும் பொரும் ஆட்டுக்கடாவும் ஆகிய பொறிகளும்; கூர்ந்து அரிவ நுண்ணூல் - கூர்ந்து அரியும் நுண்ணிய அரிகயிறுகளும்; பரந்த பசும்பொற் கொடி பதாகையொடு - பரவிய பசும்பொன்னாலான கொடிகளும் பெருங்கொடிகளும் (கொண்டு); கொழிக்கும் திருந்தும் மதில் - மிகுந்துள்ள அழகிய மதில்; தெவ்வர் தலைபனிப்பத் திருந்தின்று - பகைவரின் தலை நடுங்கத் திருந்தியது.

 

   (வி - ம்.) மதில் இன்னதும் இன்னதும் திருந்திற்றெனச் சினைவினை முதலொடு முடிந்தது. பற்றிற் பனிப்ப என்க.

 

   இத் தொடர்நிலையில் சொற்களைத் துணித்துப் பலவிடத்தினும் எடுத்துக் கூட்டியது. ('பற்றிப் பனிப்ப' என்பனபோல) செய்யுளுறுப்பு இருபத்தாறினும் மாட்டென்பது ஓருறுப்பாதலின் ; 'அகன்று பொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும் - இயன்று பொருள் முடியத் தந்தனருரைத்தல் - மாட்டென மொழிப் பாட்டியல் வழக்கின்' (தொல் - செய் 210) என்றும், 'மாட்டும் எச்சமும் நாட்டல் இன்றி - உடனிலை மொழியினும் தொடர்நிலை பெறுமே' (தொல். செய். 211) என்றும் தொல் காப்பியனார் கூறினார். இதனால் நாடு முதலிய கவிகளில் மாட்டின்றி வந்தனவுங் கொள்க. இவ்விதி மேல்வருவனவற்றிற்குங் கொள்க' என்பர் நச்சினார்க்கினியர்.