|
நூலிட்டுக் காலைக் கட்டின பாவத்தாற் பின்பு, வெள்ளி விலங்கு காலிற் கிடந்தது என்று ஆசாரியதண்டி கூறிய வாற்றானும் உணர்க. அன்றியும், அரசன் கைக்கொண்டு வரச் சொன்னவனை, அவரும் அவன் கூறியவாறே கைக்கொண்டு போயினாரென்னவே வேண்டும் ஆதலானும் அவர்கள் அவனை, 'வடிமலர்த் தாரினாய் நீ வருக' (சீவக. 1087) எனப் புகழ்ந்து இரந்து கொண்டமையானும், 'சிங்க வேறெள்ளிச் சூழ்ந்த சிறு நரிக் குழாத்திற் சூழ்ந்தார்' (சீவக. 1083) என்றும், 'அடுபுலி கண்ட மான்போல் ஆறல் ஆயினாரே' (சீவக. 1137) என்றும், 'மின்னிலங் கெயிற்று வேழம் வேழத்தாற் புடைத்து' (சீவக. 1154) என்னுங் கவியில், 'என்னையிக் கிருமி கொன்று' என்றும் கூறியிருப்பதாலும், நூபுரம் திருத்திச் சேர்ந்த நுதிவிரல் நொந்த' (1111) என்ற தற்குத் தோளையன்றி, விரலைக் கட்டினாரென்றும் கூறவேண்டுதலானும், ஆசிரியன் கூற்றும் குரவர் கூற்றும் மனத்தைப் போர் செய்யாமற் பிணித்தலின், இளையர் காவல் செய்து கொண்டு போனார் என்றலே தேவர்க்குக் கருத்தென்றுணர்க. 'ஊன்பிறங் கொளிரும் வேலான் ஓர்த்துத் தன் உவாத்திசொல்லால் - தான் புறங்கட்டப்பட்டு' (சீவக. 1090) என்றும், 'ஈன்ற தாய்தந்தை வேண்ட இவ்விடர் உற்றதென்றால், தோன்றலுக் காண்மை குன்றா தென்றசொல் இமிழிற் பூட்டி' (சீவக. 1091) என்றும், தேவர் மனத்தை இறுகப் பிணித்தமை தோன்றக் 'கட்டி' என்றும், 'பூட்டி' என்றும் செய்யுள் செய்தமை பறறிக் கந்தியாரும் இடையிடையே பாடியிட்ட செய்யுட்களிலும், அப்பொருள் தரக் கட்டியென்று செய்யுள் செய்தார் என்று உணர்க. அன்றியும் சிறை செய்தல் என்னும் சொற்குக் காவலிடுதலே பொருளாமென்று. தேவர் தாமே, 'காவல் செய்து வைத்தவர்கள்' என்று கூறியவாற்றானும் கட்டலென்னும் சொற்கு மனத்தை இறுகப் பிணித்தல் என்று பொருள் கொள்க.”
|
|