பக்கம் எண் :

                     
குணமாலையார் இலம்பகம் 632 

மிக்கு அரற்றினார் - யாங்கள் யாது செய்வோம் ? ஐயனே! என்று அன்பின் மிகுதியால் அழுதனர்.

 

   (வி - ம்.) பூஞ்சிகை - மயிர்முடி. கொம்மை - பெருமை. மாது - காதல். ஓதம் - கடல்; இது கண்ணுக்குவமை. முத்து - கண்ணீர்த் துளிக்குவமை. உண்கண் - மையுண்டகண். செய்கம் : தன்மைப் பன்மை.

( 252 )
1103 செம்பொனோலை வீழவுஞ் செய்கலங்கள் சிந்தவு
மம்பொன்மாலை யோடசைந் தவிழ்ந்துகூந்தல் சோரவு
நம்பனுற்ற தென்னெனா நாடகம் மடந்தையர்
வெம்பிவீதி யோடினார் மின்னினன்ன நுண்மையார்.

   (இ - ள்.) மின்னின் அன்ன நுண்மையார் நாடக மடந்தையர் - மின் போன்ற நுண்ணியரான நாடக மடந்தையர்; செம்பொன் ஓலை வீழவும் - பொன் ஓலை (காதிலிருந்து) வீழவும்; செய்கலன்கள் சிந்தவும் - அணிகலன்கள் சிதறவும்; அம் பொன் மாலையோடு அசைந்து அவிழ்ந்து கூந்தல் சோரவும் - அழகிய பொன்னரி மாலையுடன் அவிழ்ந்து அசைந்து கூந்தலில் சோர்ந்து போகவும் ; நம்பன் உற்றது என் எனா வெம்பி - சீவகன் உற்ற துன்பம் என்னோ என்று வருந்தி ; வீதி ஓடினார் - தெருவிலே ஓடிவந்தனர்.

 

   (வி - ம்.) நம்பன் : சீவகன். நம்பு - நசை. பிறரால் விரும்பப்படுபவன் என்பது பொருள். ”நம்பும் மேவும் நசையாகும்மே” என்பது தொல்காப்பியம் (உரி - 33). நாடகம் மடந்தையர் - விறலியர். மின்னினன்ன - மின்னலை ஒத்த. நாடகம் மடந்தையர் என்புழி மகரவொற்று வண்ணம் கருதிக் கெடாது நின்றது.

( 253 )
1104 பூவலர்ந்த தாரினான் பொற்புவாடு மாயிடிற்
போவுடம்பு வாழுயிர் பொன்றுநீயு மின்றெனா
வீகலந்த மஞ்ஞைபோல் வேனெடுங்க ணீர்மல்க
வாகுலத் தரிவைய ரவ்வயி றதுக்கினார்.

   (இ - ள்.) வீகலந்த மஞ்ஞை போல் - கெடுதியுற்ற மயில் போல ; ஆகுலத்து அரிவையர் - வருத்தமுற்ற அரிவைப் பருவ மகளிர் ; பூ அலர்ந்த தாரினான் - மலர் மலர்ந்த மாலையான்; பொற்பு வாடும் ஆயிடின் - அழகு கெடும் எனின்; உடம்புவாழ் உயிர் ! போ - உடம்பில் வாழும் உயிரே! நீ போ ; நீயும் இன்று பொன்று - (உடம்பே!) நீயும் இப்பொழுது அழிவாயாக; எனா - என்றுரைத்து ; வேல் நெடுங்கண் நீர் மல்க - வேலனைய நெடுங்கண்கள் நீரைச் சொரிய; அவ் வயிறு அதுக்கினார் - அழகிய வயிற்றிலே அடித்துக்கொண்டனர்.