பக்கம் எண் :

                     
குணமாலையார் இலம்பகம் 633 

   (வி - ம்.) பொற்பு - அழகு. உடம்பு உயிர் என்னுமிரண்டும் விளி. உடம்பே நீ போ ; உயிரே நீயும் பொன்று என மாறுக. பொன்றுதல் - இறத்தல். வீ - துன்பம். ஆகுலம் - துன்பம். அரிவை - ஈண்டுப் பருவப்பெயர். அ வயிறு என்புழி. அ - அழகு என்னும்பொருட்டு.

( 254 )
1105 தேன்மலிந்த கோதைமாலை செய்கலம் முகுத்துராய்க்
கான்மலிந்த காமவல்லி யென்னதன்ன ராயரோ
பான்மலிந்த வெம்முலைப் பைந்துகி லரிவையர்
நூன்மலிந்த நுண்ணுசுப்பு நோவவந்து நோக்கினார்.

   (இ - ள்.) பால் மலிந்த வெம்முலைப் பைந்துகில் அரிவையர் - பால் நிறைந்த வெவ்விய முலைகளையும் பைந்துகிலையும் உடைய அரிவைப் பருவ மகளிர்; தேன் மலிந்த கோதை மாலை செய்கலம் உகுத்து உராய் - தேன் நிறைந்த மலர்மாலை, மற்றைய மாலைகள், அணிகலன்கள் ஆகியவற்றைச் சிந்திப் பரவி; கால் மலிந்த காம வல்லி என்னது அன்னராய் - காற்று மிக்க காம வல்லி போல அசைந்து; நூல் மலிந்த நுண் நுசுப்பு நோவ வந்து நோக்கினார் - நூலைப் போன்ற மெல்லிடை வருந்த வந்து பார்த்தனர்.

 

   (வி - ம்.) கான்மலிந்த பொழுது காமவல்லி எங்ஙனம் அலமரும் அங்ஙனம் அலமந்து என்பது கருத்து. அரோ : அசை. அரிவைப் பருவமகளிர் ஆகலின் மகப்பேறுடையர் என்பது தோன்ற பான்மலிந்த வெம்முலை அரிவையர் என்றார். நுசுப்பு - இடை.

( 255 )
1106 மாதரார்கள் கற்பினுக்கு டைந்தமா மணிக்கலைத்
தீதிலார நூற்பெய்வார் சிதர்ந்துபோகச் சிந்துவார்
போதுலா மலங்கலான்முன் போந்துபூந் தெரிவைய
ராதகா தெனக்கலங்கி யவ்வயி றதுக்கினார்.

   (இ - ள்.) பூந்தெரிவையர் மாதரார்கள் கற்பினுக்கு உடைந்த மாமணிக்கலை - அழகிய தெரிவையராகிய பெண்டிர்கள் தம் கற்பினுக்குத் தோற்ற மாமணிக் கற்களை; தீது இல்ஆரம் நூல் பெய்வார் - குற்றம் இல்லாத மாலையாக நூலிலே கோத்துக் கொண்டிருந்தவர்கள்; சிதர்ந்துபோகச் சிந்துவார் - சிதறிப் போகச் சிந்துவாராய்; போது உலாம் அலங்கலான் முன் போந்து - மலர் கலந்த மாலையான்முன் வந்து ; ஆ தகாது எனக் கலங்கி - ஆ ! இது பொருத்தமின்று என்று கலங்கி ; அவ் வயிறு அதுக்கினார் -அழகிய வயிற்றிலே அடித்துக் கொண்டனர்.

 

   (வி - ம்.) 'மாமணிக்கலைக் கற்பினுக்கு உடைந்த மாதரார்கள் தீதுஇல் ஆரம் நூற்பெய்வார் தெரிவையர்' என மொழிகளை மாற்றி, 'முத்துக் கோக்கக் கற்ற கல்விக்குத் தோற்ற மாதரார்களின் கையில் உள்ள ஆரங்களை வாங்கிக் கோப்பாளாகிய தெரிவையர்' எனப் பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர்.