பக்கம் எண் :

                         
குணமாலையார் இலம்பகம் 635 

என்பார் - இன்றோடு புனையும் நலனும் அழகும் கல்வியும் அழியும் என்பார் ; எம் மனங்கள் வனைகலத் திகிரிபோல மறுகும் என்பார் - எம் உள்ளங்கள் எல்லாம் குயவன் பானை வனையும் சக்கரம்போலச் சுழலும் என்பார்.

 

   (வி - ம்.) விணை - ஈண்டுத் தீவினை. வினையது விளைவு என்றது ; ”இம்மைச் செய்தது யாமறி நல்வினை இஃது உம்மைப் பயன்கொல்' என்பது படநின்றது.

( 258 )
1109 நோற்றிலர் மகளி ரென்பார்
  நோங்கண்டீர் தோள்க ளென்பார்
கூற்றத்தைக் கொம்மை கொட்டிக்
  குலத்தொடு முடியு மென்பா
ரேற்றதொன் றன்று தந்தை
  செய்தவிக் கொடுமை யென்பா
ராற்றலள் சுநந்தை யென்பா
  ராதகா தறனே யென்பார்.

   (இ - ள்.) மகளிர் நோற்றிலர் என்பார் - இவன் கிடைத்தும் நெடுங்காலம் நுகர்தற்கு மனைவியரிருவரும் நோற்றிலர் என்பார் ; தோள்கள் நோம்கண்டீர் என்பார் - தோள்கள் வருந்தும் என்பார்; கூற்றத்தைக் கொம்மை கொட்டிக் குலத்தொடும் முடியும் என்பார் - கூற்றுவனைக் கைதட்டியழைத்துக் குலத்தோடும் (அரசன்) முடிவான் என்பார்; தந்தை செய்த இக் கொடுமை ஏற்றது ஒன்று அன்று என்பார் - தந்தை காட்டிக் கொடுத்த இக் கொடிய செயல் தக்கது ஆகாது என்பார் ; சுநந்தை ஆற்றலள் என்பார் - (இனி) சுநந்தை இத் துயரத்தைப் பொறுக்கமாட்டாள் என்பார்; ஆ! தகாது அறனே! என்பார் - ஆ! இது தக்கதன்று! அறக்கடவுளே! என்பார்.

 

   (வி - ம்.) 'யாம் உளேமாகவும் எம்மாற் பயன் கொளாது இவன் இங்ஙனம் சிறைவாய்ப் போவதே என்று தோள்களும் தம்மில் நோம்' என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர்.

 
  ”கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்(கு)  
  ஆற்றாதார் இன்னா செயல்.”  

   என்னுந் திருக்குறளை நினைக. மூன்றனைத் துலகமெல்லாம் முட்டினும் முருக்குமாற்றல் உடையன் என்பது பற்றி இங்ஙனம் கூறினர்

( 259 )
1110 தூக்குமின் காளை சீறிற் றுற்றிவ னுளனோ வென்பார்
காக்குமால் வைய மெல்லாங் காவல னாகி யென்பார்
பாக்கயம் பெரிது மேகா ணிதுவுமோர் பான்மை யென்பார்
நோக்கன்மி னாணுங் கண்டீர் நுதிகொ ணாகரிக னென்பார்.