பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 64 

குடியையுடைய உள்நகரமான அது; உம்பர் உலகு ஒப்பது - (நுகர்ச்சியினால்) வானுலகைப் போன்றது. அதன் தன்மை சிறிது உரைப்பது - அதன் தன்மை (முற்றும் உரைத்தற் கரிதாயினும்) சிறிது கூறுவாம்.

 

   (வி - ம்.) ஆர்த்தி : ஆர்த்ததால் எனத் திரிக்க.

 

   இச் செய்யுள் மிக மிக ஆழ்ந்த கருத்துடையது. தாம் வருந்தி ஈட்டிப் பிறர்க்கு ஊட்டுவோராகிய அறக்குடிகளே நிறைந்த நகரம் என்பார், தீவின்நிதி தடிந்து பலர்க்கு ஆர்த்தி என்றார். இம்மைச் செய்தது மறுமைக் காமெனும் நினைவோடு ஆர்த்துவார் அல்லர் ஆயினும் காரணம் காரியத்தைப் பயந்தேவிடுதல் ஒரு தலையாகலின், அம்பொனிலத்தே ஏகு குடி நகரம் என்றார். அந்நகரத்தே உரைவோர் உம்பருலகத்தை விரும்பவும் வேண்டா என்பார். அதுதான் உம்பருல கொப்பது என்றார். வள்ளன்மையான் உம்பர் உலகிதனை ஒவ்வாது இந்நகர் நுகர்ச்சியால் அதனை ஒக்கும் என்பது கருத்து. அத்தகையதாகலின் முற்றக் கூறவியலாது என்பார் சிறிதுரைப்பாம் என்றார்.

( 77 )

பரத்தையர் சேரி

 

வேறு

 
107 துப்புறழ் தொண்டைச் செவ்வாய்த் தோழியர் காமத்தூதி
னொப்பவொன் றாதி யாக வாயிரத் தோரெட் டீறாச்
செப்பித்தஞ் செம்பொ னல்கு னலம்வரை வின்றி விற்கு
முப்பமை காமத் துப்பி னவரிட முரைத்து மன்றே.

   (இ - ள்.) துப்பு உறழ் தொண்டைச் செவ்வாய்த் தோழியர் காமத் தூதின் - பவளம் அனைய தொண்டைச் செவ்வாயராகிய தோழியரென்னும் காமத்தை விளைவிக்குந் தூதினாலே; செம்பொன் ஒன்று ஆதியாக ஆயிரத்தெட்டு ஈறாஒப்பச் செப்பி - செம்பொன் ஒன்றுமுதல் ஆயிரத்தெட்டு இறுதியாக வந்தவனுக்கு ஒப்ப விலை கூறி; தம் அல்குல் வரைவின்றி விற்கும் - தம் அல்குலை அன்பு வேறுபாடின்றி விற்கும்; உப்புஅமை காமத் துப்பின் அவர் இடம் உரைத்தும் - உவர்ப்பில்லாத காமநுகர்ச்சியையுடைய பரத்தையரின் இருப்பிடத்தைக் கூறுவோம்.

 

   (வி - ம்.) தொண்டை: வாய்க்கு அடை. நலம் வரைவு இன்றி - அன்பு நிலைபெறுதல் இன்றி. 'உப்புடைய முந்நீர்' (சீவக. 280) என்றார் உவர்ப்பிற்கு. உப்பு இனிமையும் ஆம். இனி உவமைத்தொகையாக்கி, இதற்கு இஃது அளவென்று உப்பிடு மாறுபோலக் கொடுக்கும் பொருளளவான அன்பென்றும் உரைப்ப. துப்பை யொக்கும் தொண்டை போலும் செவ்வாய் என இரண்டு உவமையும் செவ்வாயை நோக்குதலின், அடுத்து வரலுவமையன்று.

 

   உப்பமை காமம் - உவர்ப்பில்லாத காமம் என்ற பொருளுக்கு அமைதல் நீங்கி நிற்றல். துப்பு - நுகர்ச்சி.