பக்கம் எண் :

               
குணமாலையார் இலம்பகம் 640 

மணியாகிய முகில் பழங்காசு என்கிற மின்னை மின்னி; பொன்மழை பொழியின் நந்தும் - பொன்னாகிய மழையைப் பொழியின் அவியும் ; அன்று எனின் புகைந்து பொங்கி - பெய்யாதெனின் அத் தீ புகைந்து பொங்கி ; துன்னினார் தம்மை யெல்லாம் சுட்டிடும் - நெருங்கினாரை யெல்லாம் சுட்டுவிடும் ; என்று - என்றெண்ணி ; கந்துகன் பன்னிரு கோடி செம்பொன் உய்த்துப் பணிந்து சொன்னான் - கந்துகன் பன்னிருகோடி செம்பொன்னைக் குவித்துத் தாழ்ந்து சிலமொழி கூறினான்.

 

   (வி - ம்.) வெகுளி வெந்தீ - சினமாகிய வெவ்விய நெருப்பு. நந்தும் - அழியும். துன்னினார் - தன்னைச் சேர்ந்«்தார். தம்மை வேந்தன் ஒறுத்திடா திருத்தற்பொருட்டுப் பன்னிருகோடி உய்த்துப் பணிந்தான் என்க.

( 267 )
1118 மன்னவ வருளிக் கேண்மோ
  மடந்தையோர் கொடியை மூதூர்
நின்மதக் களிறு கொல்ல
  நினக்கது வடுவென் றெண்ணி
யென்மக னதனை நீக்கி
  யின்னுயி ரவளைக் காத்தா
னின்னதே குற்ற மாயிற்
  குணமினி யாது வேந்தே.

   (இ - ள்.) மன்னவ! அருளிக் கேண்மோ! - அரசே! அருள் செய்து கேட்பாயாக!; மடந்தை ஓர் கொடியை - மடந்தையாகிய ஒரு கொடியை ; மூதூர் - (பெண்கொலை பிறந்தறியா) இப் பழம்பதியிலே ; நின் மதக் களிறு கொல்ல - நின் மதயானை கொன்றால் ; நினக்கு அது வடு என்று எண்ணி - நினக்கு அது பழியாமென்று நினைத்து; அதனை என் மகன் நீக்கி - அக்கொலையை என் மகன் தடுத்து ; அவளை இன் உயிர்காத்தான் - அவள் இனிய உயிரைக் காப்பாற்றினான்; வேந்தே! இன்னதே குற்றம் ஆயின் - அரசே! இப்பழி நீக்கியதே குற்றமாக முடியின் ; இனி குணம் யாது ? - இனி நன்மை யென்பதுதான் யாது ? கூறுவாயாக.

 

   (வி - ம்.) கேண்மோ என்புழி மோ முன்னிலையசை. கொடி : உவமவாகுபெயர். கொடி என்றது குணமாலையை. நின்மதக்களிறு என்றான் நினக்கு அது வடு என்றற்கு ஏதுக்காட்டற்கு. என்மகன் நினக்குச் சிறிதும் குற்றமிழைத்திலன் நின்மூதூரில் ஒரு மடந்தையை நின்மதக் களிறு கொன்றது என்றால் அது நினக்கு வசைச்சொல் என்று நினைத்தான். ஆதலாற் காத்தருள்க என்பது கருத்து.

( 268 )