பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 65 

   கணிகையர்க்குக் கொடுக்கும் பொருளின் அளவினை ”ஒன்று முதலாக ஓரெட்டிறுத்த ஆயிரங்காறும் என ஆத்த பரிசம்” (பெருங். 135 : 83-4) என்றும், ” நூறுபத்தடுக்கி யெட்டுக் கடைநிறுத்த வீறுயர் பசும்பொன்” (சிலப். 3 - 164) என்றும் பிற சான்றோரும் கூறுதல் அறிக.

( 78 )
108 குங்கும மெழுகிச் சார்வுந் திண்ணையுங் குயிற்றி யுள்ளாற்
றங்குமென் சாந்தத் தோடு தாமமுந் தாழ நாற்றி
யெங்குநற் சுவர்க டோறு நாடக மெழுதி யேற்பப்
பொங்குமென் மலர்பெய் சேக்கை பொலிந்துவிண் புகற்சி யுண்டே.

   (இ - ள்.) சார்வும் திண்ணையும் குயிற்றிக் குங்குமம் மெழுகி - சார்ந்திருக்கும் இடத்தையும் திண்ணையையும் இயற்றிக் குங்குமத்தாலே மெழுகி; உள்ளால் தங்கும் மென் சாந்தத்தோடு தாமமும் தாழ நாற்றி - உட்புறமெல்லாம் மெழுகின சந்தனத்திலே மாலையையும் தாழுமாறு தூக்கி; எங்கும் நல் சுவர்கள் தோறும் நாடகம் எழுதி - அழகிய சுவர்களெங்கும் காமக்குறிப்புப்பட நாடகம் எழுதி; ஏற்பப் பொங்கும் மென்மலர் பெய்சேக்கை பொலிந்து - தகுதியாக மிகக் மெல்லிய மலர்பெய்த அணை பொலிந்து; விண் புகற்சி உண்டு - விண்ணை விரும்பச் செய்யும் இயலுடையது அச்சேரி.

 

   (வி - ம்.) விண் : ஆகுபெயரால் தேவரைக் குறித்து நின்றது. தேவமகளிரை நுகரும் தேவரும். அவரை வெறுத்து இவரை விரும்பப் பண்ணும் இடம் என்றவாறு. அவிநயத்தானும் மெய்ப்பாட்டானும் காமக்குறிப்பு தோன்ற வரையப்பட்ட நாடகம் என்க. நாடகம் எழுதி என்றதனால் ஓவியம் என்பது பெற்றாம்.

( 79 )
109 தூசுசூழ் பரவை யல்குல் சுமக்கலா தென்ன வீழ்த்த
காசுசூழ் கோவை முத்தங் கதிர்முலை திமிர்ந்த சாந்தம்
வாசநற் பொடிகண் மாலை வண்டுண வீழ்ந்த முற்ற
மாசைப்பட் டரசுவைக வருங்கடி கமழு மன்றே.

   (இ - ள்.) தூசுசூழ் பரவை அல்குல் சுமக்கலாது என்ன - ஆடை சூழ்ந்த பரந்த அல்குல் சுமக்கமாட்டாது என்று; சூழ் கோவை வீழ்த்த காசு முத்தம் - அவ்வல்குலைச் சூழ்ந்த கோவை சிந்திய மணிகளும் முத்துக்களும்; கதிர்முலை திமிர்ந்த சாந்தம் - ஒளிவிடும் முலையிற் பூசிய சந்தனமும்; வாசநற் பொடிகள் - மணமிகு சுண்ணப்பொடியும்; மாலை - மாலையும் ஆகிய இவைகள்; வண்டு உண வீழந்த முற்றம் - வண்டுகள் உண்ணுமாறு வீழ்ந்து கிடக்கும் முற்றங்கள்; அரசு ஆசைப்பட்டு வைகும் அருங்கடி கமழும் - அரசும் விரும்பித் தங்குமாறு நன்மணம் பரப்பும்.

( 80 )