பக்கம் எண் :

                   
குணமாலையார் இலம்பகம் 653 

என்று அவன் கலங்கி நின்றான் ; ஊழ்திரைப் பாம்பு சேர்ந்த ஒளிமிகு பருதி ஒத்தான் - (அப்போது) ஊழினாற் கடலின் முகட்டிலே பாம்பினாற் பற்றப்பட்ட ஒளியுறும் ஞாயிறு போன்றான்.

 

   (வி - ம்.) தம் ஆய் : தம் மோய் எனத் திரிந்தது. 'தம்மொய் விளங்கு தோள்' எனவும் பாடம். அதற்குத் தம் என்பது பன்மைக் காதலாற் பன்மை யொருமை மயக்கம் எனக் கொள்க. 'திரைப் பரப்புச் சேர்ந்த' எனவும் பாடம். இங்கும் நச்சினாக்கினியர் 'புல்லி' என்பதற்கு 'நெருங்கிய' என்றும், 'பிணிப்ப' என்பதற்குத் 'தொழில் செய்யாதபடி செய்ய' என்றும் பொருள் கூறுவர். மற்றும் அவர் ஊழ் என்பது ஊழியின் விகாரம் என்றுரைத்து, 'ஊழித் திரைப்பருதி' என இயைத்துக் கடலிற் றோன்றிய ஞாயிறு என்று பொருள் கூறுவர்.

( 288 )
1139 ஒற்றன்வந்த துரைப்பக் கேட்டே
  யொத்ததோ வென்சொ லென்னாச்
சுற்றினார் முகத்தை நோக்கிச
  சூழிமால் யானை யன்னா
னுற்றவிவ் விடரைத் தீர்க்கு
  முபாயநீ ருரைமி னென்றான்
பொற்றிரட் குன்றம் போலப்
  பொலிவுகொண் டிருந்த தோளான்.

   (இ - ள்.) ஒற்றன் வந்து உரைப்பக் கேட்டு - ஒற்றன் வந்து இங்ஙனம் கூறக் கேட்டு ; சூழிமால் யானை அன்னான் - முகபடாம் அணிந்த பெரிய யானை போன்றவனும்; திரள் பொன் குன்றம் போலப் பொலிவு கொண்டிருந்த தோளான் - திரண்ட பொன்மலைபோல அழகுகொண்ட தோளானுமாகிய பதுமுகன்; சுற்றினார் முகத்தை நோக்கி - சூழ இருந்தவரின் முகத்தைப் பார்த்து ; என் சொல் ஒத்ததோ ? என்னா - என் மொழி பொருந்திற்றோ என்று வினவி; உற்ற இவ் இடரைத் தீர்க்கும் உபாயம் நீர் உரைமின் என்றான் - நேர்ந்த இவ் விடுக்கணைப் போக்கும் சூழ்ச்சியை நீவிர் மொழிமின் என்றான்.

 

   (வி - ம்.) சூழி - முகபடாம். மால் - பெரிய. யானையன்னானாகிய தோளான் என்க. திரள் பொன் குன்றம் என்பது திரண்ட பொன்னாகிய மலை என முன்னது வினைத்தொகையும் பின்னது பண்புத் தொகையுமாம்.

( 289 )
1140 நிறைத்திங்க ளொளியொ டொப்பான்
  புத்திசே னினைந்து சொல்லு
மறைத்திங்க ணகரை வல்லே
  சுடுதுநாஞ் சுடுத லோடு
மிறைக்குற்றேல் செய்த லின்றி
  யெரியின்வாய்ச் சனங்க ணீங்கச்
சிறைக்குற்ற நீங்கச் செற்றாற்
  செகுத்துக்கொண் டெழுது மென்றான்.