பக்கம் எண் :

                 
குணமாலையார் இலம்பகம் 654 

 

   (இ - ள்.) நிறைத் திங்கள் ஒளியொடு ஒப்பான் - கலை நிறைந்த திங்களின் ஒளியுடன் ஒப்பானாகிய; புத்திசேன் நினைந்து சொல்லும் - புத்திசேனன் சூழ்ந்து சொல்வான்; நாம் இங்கண் நகரை மறைத்து வல்லே சுடுதும் - நாம் இப்போதே நகரை மறைந்திருந்து எரிப்போம்; சுடுதலோடும் - எரித்தவுடன்; இறைக் குற்றேல் செய்தல் இன்றி - அரசனுக்குக் குற்றேவல் செய்தலை விடுத்து ; எரியின்வாய்ச் சனங்கள் நீங்க - தீயை அணைக்க மக்கள் நீங்கிய பின் ; செற்றான் செகுத்து - மதனனைக் கொன்று ; சிறைக்குற்றம் நீக்கிக்கொண்டு எழுதும் என்றான் - சிறையாகிய குற்றத்தை நீக்கிக் கொண்டு பேர்வோம் என்றான்.

 

   (வி - ம்.) 'மறைந்து' என்பது விகாரப்பட்டு 'மறைத்து' என வந்தது. புத்திசேன், குற்றேல் : விகாரங்கள் (புத்திசேனன், குற்றேவல்). இவன் அந்தணன் ஆதலின் முற்கூறினான் என்பர். இவனைத் 'திங்கள் விரவிய பெயரினான்' (சீவக. 171) என்றார் முன்னும்.

( 290 )
1141 காலத்தீ நகரை மேயக்
  கடியரண் கடிந்த வம்பிற்
சாலத்தீச் சவரர் கோலஞ்
  செய்துநம் மறவ ரீண்டிக்
கோலத்தீ வேலி னானைக்
  கோயிலுள் வளைப்ப விப்பர்
லாலைத்தீ யிடங்க டோறு
  மாகுலஞ் செய்து மென்றான்.

   (இ - ள்.) கடி அரண் கடிந்த அம்பின் - காவலுடைய மூன்று மதிலையும் அழித்த கணையைப்போல ; காலத்தீ நகரை மேய - ஊழித்தீயைப் போன்று நாம் இடும்தீ நகரை அழிக்க ; சாலத்தீச் சவரர் கோலம் செய்து - பொருந்துமாறு கொடிய வேடர் கோலங்கொண்டு ; நம் மறவர் ஈண்டி - நம் வீரர் கூடி ; கோயிலுள் கோலத் தீ வேலினானை வளைப்ப - அரண்மனையிலே அழகிய தீயனைய வேலுடையவனைச் சூழ்ந்து கொள்ள ; இப்பால் - இப் பக்கத்தே ; ஆலைத் தீ இடங்கள்தோறும் ஆகுலம் செய்தும் என்றான் - ஆலையிற் பாகு காய்ச்சும் தீயையுடைய நாடெங்கும் துன்பத்தை உண்டாக்குவோம் என்று (பதுமுகன்) கூறினான்.