பக்கம் எண் :

                       
குணமாலையார் இலம்பகம் 655 

   (வி - ம்.) 'உய்ய வல்லார் ஒரு மூவரைக் காவல் கொண் - டெய்ய வல்லானுக்கே உந்தீபற' (திருவா. திருவுந்தி.4) என்றாற்போல.

 

   காலத்தீ - ஊழிமுடிவில் உலகினை அழிக்கும் நெருப்பு. ஊழித்தீப் போலும் தீ என்க. மேய்தல் - ஈண்டு அழித்தல். கடியரண் என்றது முப்புரத்தை. அம்பு - ஈண்டுச் சிவபெருமான் எய்த அம்பு. சவரர் - வேடருள் ஒருவகையினர், வேலினான் - கட்டியங்காரன், ஆலைத்தீயிடம் என்றது மருதநில ஊர்களை.

( 291 )
1142 சிறைப்புறங் காத்துச் செல்லு
  மதனனைத் தெருவில் வீழப்
பிறைத்தலை யம்பிற் சென்னி
  பெருநிலத் திடுவ லிட்டான்
மறுக்குற்று மள்ளர் நீங்க
  மைந்தனைக் கொண்டு போகி
யறைத்தொழி லார்க்குஞ் செல்லா
  வருமிளை புகுமி னென்றான்.

   (இ - ள்.) சிறைப்புறம் காத்துச் செல்லும் மதனனை - (அப்போது) சிறையைப் பாதுகாத்துக் கொண்டு போகும் மதனனை; சென்னி தெருவில் பெருநிலத்து வீழப் பிறைத்தலை அம்பின் இடுவல் - அவன்தலை தெருவிலே தரையில் வீழுமாறு பிறை போன்ற தலையை உடைய அம்பினாலே வீழ்த்துவேன்; இட்டால் - வீழ்த்தினால் ; மறுக்குற்று மள்ளர் நீங்க - மனங்கலங்கி வீரர்கள் நீங்கினவுடன் ; மைந்தனைக் கொண்டு போகி - சீவகனைக் கொண்டு சென்று ; அறைத் தொழிலார்க்கும் செல்லா - கீழறுக்குந் தொழிலுடைய அமைச்சர்க்கும் நினைக்கவொண்ணாத ; அருமிளை என்றான் - காவற் காட்டிலே செல்லுமின் என்றான்.

 

   (வி - ம்.) மதனன் - கட்டியங்காரன் மைத்துனன். பிறைபோலும் முகத்தையுடைய அம்பு. மள்ளர் - படைமறவர். மைந்தன் : சீவகன். பதுமுகன் தன் தோழர்களை நோக்கி மதனனை ஓர் அம்பினாற் கொன்று விடுவேன். நீங்கள் சீவகனைக்கொண்டு காவற்காட்டிற் புகுமின் என்றான் என்பது கருத்து. அறைத்தொழிலார் - அமைச்சர் : கீழறுக்குந் தொழிலையுடையோர் என்பது பொருள்.

 
  ”அறைபோகமைச்சர்” (5 - 130)  

என்பர் இளங்கோவடிகளார்.

 
  ”அறைபோக்கமைச்சின் முறைபோக்கெண்ணினும்” (3 - 17 : 53)  

   என்றார் கதையினும்.

( 292 )