பக்கம் எண் :

                 
குணமாலையார் இலம்பகம் 662 

   (இ - ள்.) கச்சு அற நிமிர்ந்து - என்னைக் கட்டிய கச்சு அறுமாறு நிமிர்ந்து ; கடாவிடு களிறுபோல - பற்றி எறிகின்ற களிற்றைப்போல; மாந்தர் உச்சியும் மருங்கும் பற்றிப் பிளந்து - வீரர்களின் தலையையும் இடையையும் பிடித்துப் பிளந்து ; உயிர் பருகி - உயிரைக் கொன்று ; கோள்மா அச்சு உற அழன்று சீறி ஆட்டினம் புக்கது ஒப்ப - கொல்லுதல் வல்ல புலி அச்சம் உண்டாகக் கனன்று முழங்கி, ஆட்டு மந்தையிற் புகுந்தாற் போல; குச்சென நிரைத்த யானைக்குழாம் - பாவாற்றிபோல நெருங்க வளைந்த யானைத் திரளையும்; இரித்திடுவல் என்றான் - கெடுத்திடுவேன் என்று கருதினான்

 

   (வி - ம்.) ஆசிரியற்கு நேர்ந்ததற்குத் தாழ்வாகாதென்று இத்திரளைக் கொல்லக் கருதினான்.

 

   கச்சு - கச்சை. இது தன்னைக் கட்டிய கச்சை. கோள்மா - கொல்லுதல் வல்ல புலி. அச்சு - அச்சம். குச்சு - பாவாற்றி என்னுமொரு நெய்தற்றொழிற் கருவி.

( 303 )
1154 மின்னிலங் கெயிற்று வேழம்
  வேழத்தாற் புடைத்துத் திண்டோ்
பொன்னிலங் கிவுளித் தேராற்
  புடைத்துவெங் குருதி பொங்க
வின்னுயி ரவனை யுண்ணு
  மெல்லைநாள் வந்த தில்லை
யென்னையிக் கிருமி கொன்றென்
  றோழனை நினைப்ப லென்றான்.

   (இ - ள்.) மின் இலங்கு எயிற்று வேழம் - மின்னென விளங்கும் பற்களையுடைய வேழங்களை; வேழத்தால் புடைத்து - யானைகளால் அடித்து; திண்தேர் பொன் இலங்கு இவுளித் தேரால் புடைத்து - திண்ணிய தேரைப் பொன் விளங்கும் புரவி பூட்டிய தேராலே தாக்கி ; வெம் குருதி பொங்க இவன் இன் உயிரை உண்ணும் - வெப்பமான குருதி கொப்புளிக்கப் பகைவனுடைய இனிய உயிரைப் பருகுகின்ற; இறுதிநாள் வந்தது இல்லை - எல்லைக் காலம் இன்னும் வரவில்லை; இக் கிருமி கொன்று என்னை - (பகை களைதலை விட்டு) இப் புழுக்களைக் கொல்வதால் யாது பயன்?; என் தோழனை நினைப்பல் என்றான் - என் தோழனான சுதஞ்சணனை நினைப்பேன் என்றெண்ணினான்.

 

   (வி - ம்.) எயிறு - பல். இவுளி - குதிரை. அவனை என்றது கட்டியங்காரனை. எல்லைநாள் வந்ததில்லை என்றும் பாடம். கிருமி என்றது போர் மறவரை. கிருமி - புழு. இஃது அழித்தலின் எளிமையும் பயனின்மையும் கருதிக் கூறியபடியாம். தோழன் : சுதஞ்சணன்

( 304 )