பக்கம் எண் :

                   
குணமாலையார் இலம்பகம் 665 

1159 குன்றுண் டோங்கு திரடோளவற்
  கொண்டெழுந் தேகலு
நன்றுண் டாக வெனநன்னுதல்
  வாழ்த்தினள் வாழ்த்தலு
மொன்றுண் டாயிற் றவளுள்ளழி
  நோயுறு காளையை
யென்றுண் டாங்கொல் லினிக்கட்படு
  நாளெனுஞ் சிந்தையே.

   (இ - ள்.) குன்று உண்டு ஓங்கு திரள் தோளவன் - மலையை அடக்கி வளர்ந்த திரண்ட தோளையுடைய சீவகனை; கொண்டு எழுந்து ஏகலும் - சுதஞ்சணன் கொண்டு போகின்ற அளவில்; நன்னுதல் நன்றுண்டாக என வாழ்த்தினள் - தத்தை நலம் வருக என்று வாழ்த்தினள் ; வாழ்த்தலும் - வாழ்த்தின அளவிலே; இனி உயர் காமனைக் கண்படும் நாள் என்று உண்டாம்கொல் - இனி உயர்ந்த சீவகனைக் கண்ணாற் காணும் காலம் எப்போது உண்டாகுமோ? எனும் சிந்தை - என்னும் நினைவாகிய ; அவள் உள்அழி நோய் ஒன்று உண்டாயிற்று - அவள் மனம் வருந்தும் நோய் ஒன்று நேர்ந்தது.

 

   (வி - ம்.) குன்று உண்டு : உண்டு : உவம வாசகம். நாளென்றது காலத்தை உணர்த்தும்.

( 309 )
1160 சந்தமா லைத்தொகை தாழ்ந்துசாந் தங்கமழ் பூமியுள்
வந்தவிண் ணோர்களை வாழ்த்தியேத் திம்மலர் மாலைதூ
யெந்தை மார்க ளெழுகென்ன வேகவிடுத் தாள்குரல்
சிந்தை செய்யுஞ் சிறகர்க்கிளி தோற்குமந் தீஞ்சொலாள்.

   (இ - ள்.) சந்த மாலைத்தொகை தாழ்ந்து சாந்தம்கமழ் பூமியுள் - நிறமிகும் மாலைத்திரள் தூங்கப்பெற்றுச் சந்தனங் கமழ்கின்ற தான் வழிபட்ட நிலத்திலே ; வந்த விண்ணோர்களை மலர்மாலைதூய் வாழ்த்தி ஏத்தி - வந்த வானவர்களை மலர்மாலை தூவி வாழ்த்திக் கொண்டாடி ; எந்தைமார்கள் எழுக என்ன - எந்தையர்காள்! போவீராக என்று ; குரள் சிந்தை செய்யும் - யாழிற் குரல் என்னும் நர்ம்பு தான் இத்தன்மை பெறவேண்டும் என்று கருதுகின்ற ; சிறகர்க்கிளி தோற்கும் - சிறகினையுடைய கிளி தோல்வியுறுகின்ற; அம் தீ சொலாள் - அழகிய இன்மொழித் தத்தை; ஏக விடுத்தாள் - போக விடுத்தாள்.

 

   (வி - ம்.) குரல் சிந்தை செய்யும் தீஞ்சொல், சிறகர்க்கிளி தோற்கும் தீஞ்சொல் எனக் கூட்டுக. தான் வழிப்பட்ட வானவர் செய்து முடிக்கும் வேலை, வேறு வகையால் முடிதலின், அவரைப் போக வென்றாள்.

( 310 )