பக்கம் எண் :

             
  669 

5. பதுமையார் இலம்பகம்

 

(கதைச் சுருக்கம்)

 

   இவ்வாறு சுதஞ்சணனோடிருந்த சீவகன் நாடுகள் பலவற்றினுஞ்சென்று ஆங்காங்குள்ள காட்சிகளைக் காணவிரும்பினான். இவ்விருப்பத்தைச் சுதஞ்சணனுக்குக் கூறினன். அதுகேட்ட சுதஞ்சணன் சீவகனுக்கு நெறியின் இயல்பு கூறி மேலும் காமனுங் காமுறப்படும் இன்குரல் தருவதும், பாம்பு முதலியவற்றால் உண்டாகுந் தீங்குகளையும் நோய்களையும் தீர்ப்பதும், கருதிய உடம்பினைத் தருவதுமாகிய மூன்று மறைமொழிகளைச் செவியறிவுறுத்தனன். பின்னர்ச் சீவகனை இனிதினேந்திக்கொண்டு இழிந்து, நிலவுலகில் விடுத்துச் சென்றான்.

 

   சீவகன் சுதஞ்சணன் கூறிய நெறிபற்றிச் சென்றனன். வழியில் கொலைத்தொழிலை மேற்கொண்டுழன்ற வேடனொருவனைக் கண்டு அவனுக்கு உறுதிமொழிகூறி நன்னெறிப்படுத்தனன். அப்பால் செல்லுங்கால் காட்டுத் தீயால் வளைப்புண்ட யானைத்திரளைக் காப்பாற்றினன். பின்னர் அரணபாதம் என்னும் மலையை எய்தி ஆண்டு அருகக்கடவுளை வணங்கினன். சாரணர்களைக் கண்டு வணங்கினன். பின்னர்ப் பல்லவ நாட்டிலுள்ள சந்திராபம் என்னும் நகரை அடைந்தனன். அந்நகரத்தரசனாகிய தனபதியோடும், அவன் மகனான உலோக பாலனோடும் கேண்மை கொண்டனன். அவ்வரசன் மகளாகிய பதுமை என்பாளைப் பாம்பு தீண்டியதாக, அவளுற்ற விட நோய் தீர்த்து அவளை மணந்தனன். அவளோடு இரண்டு திங்கள் இன்புற்று அந்நகரத்தே வதிந்தனன். பின்னரும் நாடுகாணும் வேட்கை மிகுதலாலே நள்ளிரவிற் பதுமையைப் பிரிந்து வேற்றுருக்கொண்டு அந்நகரத்தினின்றும் புறப்பட்டுச் சென்றனன்.

 

   சீவகன் பிரிவால் பதுமை பெரிதும் வருந்தினள். தன் தோழிமாருள் ஒருத்தி தேற்ற ஒருவாறு தேறியிருந்தாள். தனபதி மன்னன் தன் மகள் துயரம் பொறானாய்ச் சீவகனைத் தேடிக்கொணர்தற்குச் சிலரை ஏவினான். அவர்கள் சீவகனையாண்டுந் தேடி ஓரிடத்தே கண்டு ”நின்போன்ற இளமையும் வடிவுமுடையான் ஓர் ஏந்தலை நீ யாண்டேனும் கண்டதுண்டோ?” என்று வினவினர் அதுகேட்ட சீவகன், ”நண்பரீர்! நீயிர் தேடா நின்ற அக்காதலனை ஒன்பதாந் திங்களிலே காண்பீர்! இவ்வுண்மையை நும் மன்னனுக்குக் கூறுமின்!” என்று கூறிவிடுத்தனன். அவரும் சென்று அரசனுக்கு அந்நிகழ்ச்சியினை அறிவுறுத்தனர். சீவகன் பின்னர் அவ்விடத்தினின்றும் புறப்பட்டு ஒரு திசையே செல்லா நின்றனன்.