பக்கம் எண் :

               
பதுமையார் இலம்பகம் 670 

1166 வீட்டருஞ் சிறையிற் றேவன்
  விடுத்துயக் கொள்ளப் பட்ட
கோட்டமில் குணத்தி னான்போ
  யென்செய்கின் றான்கொ லென்னிற்
கூட்டரக் கெறிந்த பஞ்சிற்
  கூடிய பளிங்கிற் றோன்றுந்
தீட்டரும் படிவ மன்னான்
  றிறங்கிளந் துரைத்து மன்றே.

   (இ - ள்.) வீடு அருஞ் சிறையில் தேவன் விடுத்து உயக்கொள்ளப்பட்ட - எல்லா வழியானும் விடுவித்தற்கரிய சிறையிலிருந்து சுதஞ்சணனால் விடுவித்து வாழ்விக்கப் பெற்ற; கோட்டம் இல் குணத்தினான் போய் என் செய்கின்றான் என்னின் - குற்றம் அற்ற பண்புடைய சீவகன் (அவனுடன்) சென்று என்ன செய்கிறான் என்றால்; கூட்டு அரக்கு எறிந்த பஞ்சின் - செவ்வரக்கு ஊட்டிய பஞ்சினாலே; கூடிய பளிங்கில் தோன்றும் - அப் பளிங்கினிடத்தே தோன்றுகிற; தீட்ட அரும் படிவம் அன்னான் திறம் - எழுதற்கரிய படிவத்தைப் போன்ற சீவகனின் நிலையை; கிளந்து உரைத்தும் - முற்படச் சுதஞ்சணன் செயலையுரைத்துப் பின்னர் உரைப்போம்.

 

   (வி - ம்.) இந்நிலையினும் ஆசிரியனுக்குரைத்த மொழி தப்பாமையிற் சீவகனைக் 'கோட்டம் இல் குணத்தினான்' என்றார்.

 

   பிறவழிகளால் போக்குதற்கரிய சிறை என்பார் வீட்டருஞ்சிறை என்றார். விடுத்து - விடுவித்து. கோட்டம் - குற்றம், கூட்டு அரக்கெறிந்த பஞ்சு - செல்வரக்குக் கூட்டிய ஊட்டின பஞ்சு என மாற்றுக. பளிங்கைக் கூடிய பஞ்சாலே அப்பளிங்கிடத்தே தோன்றும் படிவத்தை ஒப்பான் - சீவகன்.

 

   வண்தளிர் என்னும் (1225) செய்யுள்காறும் சுதஞ்சணன் செய்தி கூறப்படும்.

( 1 )
1167 விலங்கிவில் லுமிழும் பூணான்
  விழுச்சிறைப் பட்ட போழ்து
மலங்கலந் தாரி னான்வந்
  தருஞ்சிறை விடுத்த போழ்தும்
புலம்பலு மகிழ்வு நெஞ்சிற்
   பொலிதலு மின்றிப் பொன்னார்ந்
துலங்கலந் துயர்ந்த தோளா
  னூழ்வினை யென்று விட்டான்.