பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 672 

1169 திங்களைத் தெளித்திட் டன்ன
  பாற்கடற் றிரைசெய் தெண்ணீர்
வெங்கள்விட் டலர்ந்த கண்ணி
  விண்ணவ னுரிமை தன்னான்
மங்கல வகையி னாட்டி
  மணியணி கலங்கள் சோ்த்திப்
பங்கய நெடுங்க ணானைப்
  பவித்திர குமர னென்றான்.

   (இ - ள்.) வெம் கள் விட்டு அலர்ந்த கண்ணி விண்ணவன் - விருப்பம் தரும் தேனைச் சொரிந்து மலர்ந்த மாலையணிந்த சுதஞ்சணன்; பங்கய நெடுங்கணானை - தாமரை மலரனைய கண்களையுடைய சீவகனை; திங்களைத் தெளித்திட் டன்ன பால் திரைசெய் கடல் தௌ்நீர் - திங்களைக் கரைத்தாற் போன்ற அலையுடைய பாற்கடலிலிருந்து தெளிந்த நீரைக் கொண்டு வந்து; உரிமை தன்னால் மங்கல வகையின் ஆட்டி - உரிமைமகளிரைக் கொண்டு மங்கல விதிப்படி முழுக்காட்டி; மணி அணிகலங்கள் சேர்த்தி - மணிகளிழைத்த அணிகலங்களையும் பூட்டி; பவித்திரகுமரன் என்றான் - தூய மகன் என்ற பாராட்டினான்.

   (வி - ம்.) சிறைப் பாவம் நீங்கினதாற் 'பவித்திர குமரன்' என்றான்.

   விண்ணவன் - சுதஞ்சணன். உரிமை - மனைவிமார். நெடுங்கணானை - சீவகனை. பவித்திரம் - தூய்மை.

( 4 )
1170 பொன்னணி காம்பு செய்த பொழிகதிர்த் திங்கள் போலும்
பின்னய முத்த மாலைப் பிணையறாழ் குடையி னீழற்
கன்னியர் கவரி வீசக் கனமணிக் குழைவில் வீச
வின்னிசைக் கூத்து நோக்கி யிருந்தனன் றிலக மன்னான்.

   (இ - ள்.) பொன் அணி காம்பு செய்த பொழி கதிர்த் திங்கள்போலும் - பொன்னால் ஆக்கிய காம் பொன்றினைச் சேர்த்த, நிலவினைச் சொரியும் திங்களைப் போன்ற; முத்தமாலைப் பின்னியப் பிணையல் தாழ் குடையின் நீழல் - சல்லியும் தூக்குமாக முத்து மாலை பின்னப்பட்ட, மலர்மாலை யணிந்த குடையின் நீழலிலே; கன்னியர் கவரி வீச - கன்னிப் பெண்கள் கவரிகொண்டு வீச; கன மணிக்குழை வில் வீச - பெரிய மணிக்குழை ஒளிவிட; இன் இசைக் கூத்து நோக்கி - இனிய இசையுடன் கூடிய ஒரு நாடகத்தைப் பார்த்து; திலகம் அன்னான் இருந்தனன் - சீவகன் வீற்றிருந்தான்.