பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 675 

   (வி - ம்.) அவனுயிர் செகுத்தல் எளிதென்றான். செகுத்து : செகுப்பேன் என்று தன்மை யொருமை வினைமுற்றாகக் கொள்வதும் பொருந்தும். மற்று : அசை. 'தாரும்' என்பது 'தரும்' எனவும், 'தரும்' என்பது 'தருகும்' எனவும் விகாரமுற்றன.

( 9 )
1175 மண்மிசைக் கிடந்தன மலையுங் கானமு
நண்ணுதற் கரியன நாடும் பொய்கையுங்
கண்மனங் குளிர்ப்பன வாறுங் காண்பதற்
கெண்ணமொன் றுளதெனக் கிலங்கு பூணினாய்.

   (இ - ள்.) இலங்கு பூணினாய்! - விளங்கும் அணிகலனுடையாய்!; மண்மிசைக் கிடந்தன - நிலவுலகிலே பரவிக் கிடந்தனவாகிய; நண்ணுதற்கு அரியன - நெருங்குதற்கு இயலாதனவாகிய; மலையும் கானமும் - மலைகளையும் காடுகளையும்; நாடும் பொய்கையும் - நாடுகளையும் பொய்கைகளையும்; கண் மனம் குளிர்ப்பன ஆறும் - கண்ணும் மனமும் குளிர்வனவாகிய ஆறுகளையும்; காண்பதற்கு எண்ணம் ஒன்று எனக்கு உளது - பார்ப்பதற்கு நினைவு ஒன்று எனக்கு உண்டு.

   (வி - ம்.) மண் - நிலவுலகம். மண்மிசைக் கிடந்தனவாகிய மலையும் கானமும் நாடும் பொய்கையும் ஆறும் என மாறுக.

( 10 )
1176 காற்றின தமைதியங் கறியக் கூறினான்
ஊற்றுநீர்க் கூவலு ளுறையு மீனனார்
வேற்றுநாட தன்சுவை விடுத்தன் மேயினார்
போற்றுநீ போவல்யா னென்று கூறினாற்.

   (இ - ள்.) ஊற்று நீர்க் கூவலுள் உறையுள் மீன் அனார் - ஊறும் நீரையுடைய கிணற்றிலே வாழும் மீன் போன்றவர்கள்; வேற்று நாடு அதன் சுவை விடுத்தல் மேயினார் - பிறநாடுகளைக் காணும் இனிமையை விடுத்தவராவார்; நீ போற்று - இவ்விடத்தே நீ பேணி யிரு; யான் போவல் - நான் நாடுகாணச் செல்வேன்; என்று கூறினாற்கு - என்றுரைத்த சீவகனை நோக்கி; ஆற்றினது அமைதி அங்கு அறியக் கூறினான் - நெறியினது நிலைமையை அங்குத் தெரியும்படி கூறினான்.

   (வி - ம்.) சுதஞ்சணன் உடன்வாரா வண்ணம், 'போற்று' என்றான்.

   கிணற்றில் வாழும் மீன் அந்நீரினுஞ் சிறந்த வேறு நீர் இல்லையென்று அதனையே பெரிது மதித்திருப்பது போலத் தம் ஊரையே மதித்திருப்பார் என்பது. வேற்றுநாடதன்சுவை என்றது பிறநாட்டைக் காணுங்கால் உண்டாகும் இன்பத்தினை. ஆற்றினதமைதி - வழியினது இயல்பு.

( 11 )