1177 |
இம்மலைக் கிரண்டு காத மிறந்தபி னிருண்டு தோன்று |
|
மம்மலை யரண பாத மென்பதன் றாள்வாய்த் தோன்றுந் |
|
தம்வினை கழுவு கின்றார் சாரணர் தரணி காவல் |
|
வெம்மையி னகன்று போந்து விழைவறத் துறந்து விட்டார். |
(இ - ள்.) இம் மலைக்கு இரண்டு காதம் இறந்த பின் - இம் மலையிலிருந்து இரண்டு காதம் கடந்த பிறகு; இருண்டு தோன்றும் அம் மலை அரணபாதம் என்ப - இருண்டு காணப்படும் அம் மலையை அரணபாதம் என்பர்; அதன் தாள் வாய் - அதன் அடி மலையிலே; தோன்றும் தம் வினை கழுவுகின்றார் சாரணர் - பிறப்புக்குக் காரணமான தம் இருவினையையும் போக்குகின்றவராகிய சாரணர்; வெம்மையின் தரணிகாவல் அகன்று போந்து - தாம் வீட்டை விரும்புதலின் உலகக் காவலைத் துறந்து வந்து; விழைவு அறத் துறந்துவிட்டார் - பின்னர்ப் பற்றறத் துறந்துவிட்டவர்கள்.
|
(வி - ம்.) அரண பாதம் - அருகன் கோயிலுள்ள மலை
|
இம்மலை என்றது அவர்களிருக்கும் சந்திரோதயம் என்னு மலையை. காதம் - ஓர் அளவு. என்ப என்பதன் ஈற்றகரம் கெட்டு அதன் என்னுஞ் சுட்டோடு கூடி 'என்பதன்' எனப் புணர்ந்து நின்றது. பிறத்தற்கு ஏதுவான தம்முடைய வினை என்க. தோன்றுகின்ற இருவினையையும் என்பர் நச்சினார்க்கினியர். தரணிகாவல் வெம்மையின் அகன்று போந்து என்பதற்கு - காவற்றொழில் வெம்மையுடைமையால் அகன்று போந்து எனினுமாம். விழைவு - அவாவுமாம்.
|
( 12 ) |
1178 |
சிந்தையிற் பருதி யன்னார் சேவடி யிறைஞ்ச லோடும் |
|
வெந்திற லியக்கி தோன்றி விருந்தெதிர் கொண்டு பேணித் |
|
தந்தவ ளமிர்த மூட்ட வுண்டவட் பிரிந்த காலைச் |
|
சந்துடைச் சாரல் சேறி தரணிமேற் றிலக மன்னாய். |
(இ - ள்.) தரணிமேல் திலகம் அன்னாய் - நிலவுலகில் திலகம்போலச் சிறப்புற்றோனே!; சிந்தையின் பருதி அன்னார் சேவடி இறைஞ்சலோடும் - மலங்களைப் போக்கும் மனத்தாலே ஞாயிறு போல்வாருடைய சிவந்த அடிகளை வணங்கின அளவிலே; வெம்திறல் இயக்கி தோன்றி - பேராற்றலுடைய இயக்கி எதிர்ப்பட்டு; அவள் எதிர்கொண்டு அமிர்தம் தந்து பேணி ஊட்ட உண்டு - அவள் நின்னை வரவேற்று அமிர்தத்தைத்தந்து ஓம்பி விருந்தூட்ட உண்டு; அவள் பிரிந்த காலை - அவளைப் பிரிந்த அளவிலே; சந்துடைச் சாரல் சேறி - சந்தன மரங்கள் நிறைந்த அம் மலையின் சாரலிலே செல்வாயாக.
|
(வி - ம்.) அமிர்தந் தந்து பேணி ஊட்ட என மாறுக. அமிர்தம் - ஈண்டு உணவிற்கு ஆகுபெயர். சந்து - சந்தனமரம்.
|
( 13 ) |
|