பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 678 

   (இ - ள்.) காந்திய மணியொடு வயிரம் பொன் கலந்து - ஒளி செய்யும் மணிகளுடன் வயிரமும் பொன்னும் கொண்டு; ஏந்தல் நின்தோள் என இரண்டு குன்று போய் - ஏந்திய நின்தோள்களைப் போன்ற இரண்டு குன்றுகள் வளரப் பெற்று; பூந்துகில் மகளிரின் பொலிந்து போர்த்தது - பூந்துகில் அணிந்த மகளிரைப் போலப் பேய்கள் பொலிந்து மனத்தை மறைக்கு மியல்புடையதாகிய; ஓர் பெரிய பேந்தரு பேய்வனம் காண்டியே - ஒரு பேரச்சந்தரும் பேய்வனத்தைக் காண்பாயாக.

   (வி - ம்.) குன்றுபோய் என்புழிப் போகல் என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த போய் என்னும் எச்சம் வளர்ந்து என்னும் பொருள் தந்து பின்னும் செயப்பாட்டுவினை எச்சப்பொருள் பயந்து நின்றது. பேம் - அச்சம்.

  ”பேநாம் உரும் என வரூஉங் கிளவி

   ஆமுறை மூன்றும் அச்சப் பொருள”(தொல். உரி. 69)

( 16 )
1182 இளவெயின் மணிவரை யெறித்திட் டன்னதோ
ரளவரு குங்குமத் தகன்ற மார்பினாய்
களவினி னணிநலங் கவர்ந்த கள்வவென்
றுளர்மணிக் கொம்பனா ருருகி நைபவே.

   (இ - ள்.) இளவெயில் மணிவரை எறித்திட் டன்னது - காலை வெயில் மணிவரையிலே வீசியது போன்றதாகிய; ஓர் அளவறு குங்குமத்து அகன்ற மார்பினாய்! - ஒப்பற்ற மிகுதியான குங்குமம் கலந்த பரந்த மார்பினையுடையாய்!; களவினின் அணிநலம் கவர்ந்த கள்வ என்று - களவினிலே அழகையும் நலன்களையும் கவர்ந்த கள்வனே என்று கூறி; உளர் மணிக்கொம்பனார் உருகி நைபவே - அசையும் மணிக்கொடி போன்ற அப் பேய் மகளிர் நின்னைக் கண்டு உருகி வருந்துவார்கள்.

   (வி - ம்.) மார்பினாய் என்னுந்துணையும் சுதஞ்சணன் சீவகனை விளித்ததாகக் கொள்ளினும் அமையும். அப்பேய்கள் அழகிய மகளிர் உருக்கொண்டு நின்னை இங்ஙனம் மயக்கும் என்பது தோன்ற மணிக் கொம்பனார் என்றான். நைப : பலர் அறிசொல்.

( 17 )
1183 பழங்குழைந் தனையதோர் மெலிவிற் பையென
முழங்கழல் வேட்கையின் முறுகி யூர்தரத்
தழும்பத மிதுவெனச் சார்ந்து புல்லலும்
பிழிந்துயி ருண்டிடும் பேய்க ளாபவே.

   (இ - ள்.) முழங்கு அழல் வேட்கையின் - பொங்கும் தீயனைய வேட்கையினாலே; பழம் குழைந்தனையதோர் மெலி