பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 682 

முதல் நான்கு பாட்டையும் ஒரு தொடராக்கி, 'விதி கண்டவரல்லது மீது செலார்' என்பதை இறுதியிற் கூட்டுவர்.

   கடநாகம் - மதயானை; காட்டியானையுமாம். உடைநாண் : வினைத்தொகை; முறுக்குடைந்த கயிறு என்க. அயலார் : விதிகாணாதார்.

( 24 )
1190 நெறியிற்றளர் வார்தம நெஞ்சுருகிப்
பொறியிற்றளர் வார்புரி வார்சடையா
ரறிமற்றவர் தாபத ரவ்வழியார்
கறைமுற்றிய காமரு வேலவனே.

   (இ - ள்.) கறை முற்றிய காமரு வேலவனே! - குருதிக்கறை முற்றிய விருப்பூட்டும் வேலவனே!; நெறியின் தளர்வார் - நன்னெறியிலிருந்து விலகியவரும்; தம் நெஞ்சு உருகிப் பொறியின் தளர்வார் - தம் உள்ளம் நெகிழ்ந்து ஐம்பொறிகளினாலே தளர்வாரும், புரிவார் சடையார் - முறுக்கின நீண்டசடையுடைய வரும் (ஆகிய); அவர் தாபதர் அவ்வழியார் - அவர் முனிவராகி அந்நெறியிலே உளர்; அவர் அறி - அவர்களைக் கண்டு அவர் தன்மையை அறிந்து செல்.

   (வி - ம்.) நெறி - நல்லொழுக்கம். பொறி - மெய் வாய் கண் மூக்குச் செவி. அறி : ஏவல் வினை : கறை - நஞ்சுமாம். வேலவன் : சீவகன். நெறியிற்றளர்வாரும், பொறியிற்றளர்வாரும், புரிவார் சடையாராகி அவரே தாபதரா யவ்வழியிருப்பார் அறி என வினை முடிவுசெய்க.

( 25 )
1191 குலைவாழை பழுத்த கொழும்பழனு
நிலைமாத்தன தேமுறு தீங்கனியும்
பலவீன்றன முள்ளுடை யள்ளமிர்து/span>
மலையாற்றயல் யாவு மடுத்துளவே.

   (இ - ள்.) குலைவாழை பழுத்த கொழும் பழனும் - குலையையுடைய வாழைகளிற் பழுத்த வளமிகு பழங்களும்; நிலை மாத்தன தேம் உறு தீ கனியும் - நிலையான மாவினிடமுள்ள தேன் பொருந்திய இனிய கனிகளும்; முள் உடை பலவு ஈன்றன அள் அமிர்தும் - முள்ளுடைய பலவின் கனியிலுள்ள செறிந்த அமிர்தும்; யாவும் - பிறவும்; மலை யாற்றயல் மடுத்து உள - மலைக்கும் யாற்றிற்கும் நடுவே நெருங்கியுள்ளன.

   (வி - ம்.) எனவே ஆண்டுள்ள தாபதர் அவற்றை உணவாகக் கொள்வர் என்க.

   பழன் - பழம் : மகரத்திற்கு னகரம் போலி. மாத்தன - மாமரத்திலுள்ளன. தேம் - இனிமை. தீங்கனி என்புழி தீம் வாளா பெயர் மாத்திரையாய் நின்றது. அள் - செறிவு. அமிர்து - ஈண்டுக் கனிக்கு உவமவாகுபெயர்.

( 26 )