பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 687 

   (இ - ள்.) யானை வெண் மருப்பினால் யாவதும் இயற்றி - யானையின் வெள்ளிய மருப்பினால் கால்வளை முதலிய எல்லாவற்றையும் அமைத்து; மான மாக்கவரி வெண் மயிரின் வேய்ந்தன - மானமுறும் விலங்காகிய கவரியின் வெண்மையான மயிரினால் வேய்ந்தனவாகிய; தேன் நெய் ஊன் கிழங்கு காய் பழங்கள் செற்றிய - தேன் முதலிய இவ்வுணவுப் பொருள்களைச் செறித்த; கானவர் குரம்பை சூழ்காடு தோன்றும் - வேடர் குடில்கள் சூழ்ந்த காடு தோன்றும்.

   (வி - ம்.) வேய்ந்த குரம்பை, செற்றிய குரம்பை எனக் கூட்டுக.

   மானமா - கவரிமான். மயிர்நீப்பினும் வாழ வியல்புடையதுபற்றிக் கவரிமானை மானமா என்ப. குரம்பை - சிறுகுடில்.

( 36 )
1202 கடுந்துடிக் குரலொடு கடையுங் கட்குர
னெடுங்கைமான் குரன்மணி யருவி நீள்குர
லடும்புலிக் குரலொடு மயங்கி யஞ்சிய
விடும்பைமான் குரல்விளி யெங்கு மிக்கவே.

   (இ - ள்.) கடுந் துடிக் குரலொடு கடையும் கள் குரல் - விரையும் துடி யொலியுடன், கள் அரிக்குங் குரலும்; நெடுங் கை மான்குரல் - நீண்ட கையையுடைய யானையின் குரலும்; மணி அருவி நீள் குரல் - மணி யரித்து வரும் அருவி வீழ்குரலும்; அடும் புலிக் குரலொடு அஞ்சி மயங்கிய - கொல்லும் புலி முழக்கிற்கு அஞ்சி மயங்கிய; இடும்பை மான் குரல் - துன்புற்ற மான் குரலும்; விளி - சீழ்க்கையும்; எங்கும் மிக்க - அக் காடெங்கும் மிக்கன.

   (வி - ம்.) கடு : கடியென்னும் உரிச்சொல்லின் திரிபு. புலிக் குரலொடு : உருபு மயக்கம். விளி : நாவின் நுனியை மடித்தெழுப்பும் ஒலி.

( 37 )
1203 பொன்னணி திகிரியஞ் செல்வன் பொற்புடைக்
கன்னிய மகளிரிற் காண்டற் கரியன
நன்மணி புரித்தன வாவி நான்குள
கன்னவி றோளினாய் காட்டு வாயவே

   (இ - ள்.) கல் நவில் தோளினாய் - கல்லெனக் கூறுந் தோளுடையாய்!; காட்டு வாய - அக் காட்டிடத்துள்ளன வாகிய; பொன் அணி திகிரி அம் செல்வம் பொற்பு உடைக் கன்னி மகளிரின் - பொன்னால் அணிந்த ஆழியை யுடைய மன்னர் பெருமானின் அழகுறு கன்னிப் பெண்களைப் போல; காண்டற்கு அரியன - பிறராற் காண வியலாத; நல்மணி புரித்தன - நல்ல மணிகள் நிறைத்தனவாகிய; வாவி நான்கு உள - குளங்கள் நான்கு உள்ளன.