பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 688 

   (வி - ம்.) 'காட்டு வாய வாவி' என்க. கன்னிய : அ : அசை. 'பூரித்தன' என்பது, 'புரித்தன' என விகாரமுற்றது.

( 38 )
1204 அருங்கலச் சேயித ழார்ந்த வாவியொன்
றிரும்பெரி பொன்செயு மிரத நீரதொன்
றொருங்குநோய் தீர்ப்பதொன் றமிர்த மல்லதொன்
றரும்பவிழ் குவளைநீர் வாவி யாகுமே.

   (இ - ள்.) அருங்கலச் சேயிதழ் ஆர்ந்த வாவி ஒன்று - அரிய சிவந்த இதழையுடைய பொற்றாமரை நிறைந்த குளம் ஒன்று; இரும்பு எரி பொன் செயும் இரத நீரது ஒன்று - இரும்பை ஒளிவிடும் பொன்னாக மாற்றும் இரத நீருடைய குளம் ஒன்று; நோய் ஒருங்கு தீர்ப்பது ஒன்று - எல்லா நோயையும் நீக்குங்குளம் ஒன்று; ஒன்று அல்லது அமிர்தம் - மற்றொரு குளம் அமிர்தம் போன்றது; அரும்பு அவிழ்குவளை நீர் வாவி ஆகும் - (அது) அரும்பு மலர்ந்த குவளையையுடைய நீர் நிறைந்த குளமாகும்.

   (வி - ம்.) 'அமிர்தம் அல்லது ஒன்று' என்பதை 'நச்சுப் பொய்கை' என்றும் உண்பதற்குரியது குவளைநீர் வாவியாகும் என்றும் ஏகாரம் எதிர்மறைப் பொருளதென்றும் நச்சினார்க்கினியர் கூறுவர். 'வாவி நான்குள' என்பதனால் ஐந்தாவது குளம் ஒன்று காணுமாறில்லை. எனவே, இங்ஙனங் கொள்ளாமல், 'நீர் வாவி அமிர்தம் அல்லது ஒன்று' எனக்கொண்டு நீர் வாவியே நச்சுப் பொய்கை எனக் கொள்வதும் பொருத்தமுடைத்து. ஏ : ஈற்றசை.

( 39 )
1205 கையடு சிலையினர் காட்டுள் வாழ்பவர்
பையுடை யாக்கையர் பாவ மூர்த்திய
ரையெனத் தோன்றுவர் தோன்றி யாளழித்
துய்வகை யரிதென வுடலங் கொள்பவே.

   (இ - ள்.) காட்டுள் வாழ்பவர் - (அவற்றைக் காத்துக்) காட்டில் வாழ்கின்றவர்கள்; கை அடு சிலையினர் - கையிலே கொல்லும் வில்லினர்; பையுடை யாக்கையர் - பை அணிந்த மெய்யினர்; பாவமூர்த்தியர் - பாவமான உருவத்தினர்; ஐயெனத் தோன்றுவர் - விரையத் தோன்றுவர்; தோன்றி உய்வகை அரிது என - அங்ஙனந் தோன்றிப் பிழைத்தல் அரிது என்று கூறி; ஆள் அழித்து உடலம் கொள்ப - (அவ்வாவிகளை விரும்பி அணுகிய) ஆட்களை அழித்து உடலைக் கொண்டு செல்வர்.

   (வி - ம்.) வாவிகளை அணுகியவரைப் பாவமூர்த்தியர் எனக் கூறுவர் நச்சினார்க்கினியர். 'பையுள் உடை யாக்கையர்' என்பது விகாரப்பட்டது எனினும் ஆம். பையுள் - துன்பம். ஐ எனத் தோன்றுவர் என்பதற்கு இவர் வடிவு அழகு என்று நினைக்கும்படி தோன்றுவர் எனவும் பொருள் கூறலாம்.

( 40 )