பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 692 

1213 சுரும்புசூழ் குவளையோர் சுனையுண் டச்சுனை
மருங்கிலோர் மணிச்சிலா வட்ட முண்டவண்
விரும்பிவண் டிமிர்வதோர் வேங்கை வேங்கையின்
மருங்கிலோர் செந்நெறி வகுக்கப் பட்டதே.

   (இ - ள்.) சுரும்புசூழ் குவளை ஓர் சுனை உண்டு - வண்டுகள் சூழும் குவளைகளையுடைய ஒரு சுனை உளது; அச் சுனை, மருங்கில் ஓர் மணிச் சிலாவட்டம் உண்டு - அச் சுனையின் அருகிலே ஒரு வட்டப் பாறை உளது; அவண் வண்டு விரும்பி இமிர்வது ஓர் வேங்கை - அங்கே வண்டுகள் விரும்பி முரல்வதாகிய ஒரு வேங்கைமரம் உளது; அவ் வேங்கையின் மருங்கில் ஓர் செந்நெறி வகுக்கப்பட்டது - அவ் வேங்கையின் அருகில் உள்ள செவ்விய நெறியே நான் முன்னர் உரைக்கப்பட்டது.

   (வி - ம்.) ஓர் சுரும்புசூழ் குவளைச் சுனையுண்டு என மாறுக. குவளைச்சுனை - குவளை மலரையுடைய சுனை. சிலவாட்டம் - வட்டப்பாறை. இமிர்வது - முரல்வதற்கு இடமானது. அவ்வேங்கையின் மருங்கில் என்க

( 48 )

வேறு

1214 கைம் மலர்த்த அனைய காந்தள் கடிமலர் நாறு கானம்
மொய்ம் மலர்க் குவளைக் கண்ணி மொய்ம்ப நீ முழுதும் நீந்தி
வைம் மலர்த்து இலங்கும் வெள்வேல் மத்திம தேயம் ஆளும்
கொய்ம் மலர்த் தாரினானைக் கண்ணுறு குணம் அது என்றான்

   (இ - ள்.) மொய்ம்மலர்க் குவளைக் கண்ணி மொய்ம்ப! - நெருங்கிய குவளை மலர்க் கண்ணியை உடைய தோளனே!; கைம்மலர்த்த அனைய காந்தள் கடிமலர் நாறு கானம் - கையை விரித்தாற் போன்ற காந்தளின் மணமுறு மலர் கமழும் கானம்; முழுதும் நீ நீந்தி - முழுவதையும் நீ கடந்து சென்று; வை மலர்த்து இலங்கு வெள்வேல் மத்திம தேயம் ஆளும் - கூர்மைமிக்கு விளங்கும் வேலையுடைய, மத்திம நாட்டைக் காக்கும்; கொய்ம்மலர்த் தாரினானை - கொய்த மலர் மாலையுடைய மன்னனை; கண்உறு! - காண்பாயாக!; அது குணம் என்றான் - அது நினக்கு ஊழால் அமையக் கூடியது என்று சுதஞ்சணன் இயம்பினான்.

   (வி - ம்.) கடிமலர் - மணமுடைய மலர். மொய்ம்மலர் - செறிந்த மலர். மொய்ம்ப : விளி. மொய்ம்பு - தோள்; வலிமையுமாம், கண்ணுறு என்பது ஏவல் வினை. அது குணம் என மாறுக. குணம் - பண்பு.

( 49 )
1215 மண்ணகங் காவன் மன்னன் மாதரம் பாவை மாசி
லொண்ணுதன் மகளைத் தந்தீங் குறைகென வொழுகு நாளுள்
வெண்மதி யிழந்த மீன்போற் புல்லென வெய்தி நின்ற
வண்ணனின் றோழ ரெல்லா மவ்வழி யடைய ரென்றான்.