(வி - ம்.) கொல் : அசை. பன்னிரு மதியின் : இன் : சாரியை; ஏழனுருபு என்றும் புறனடையாற் கொள்கவென்றும் நச்சினார்க்கினியர் கூறுவர். மற்றும் அவர், 'வெள்ளிமலையிற் றோன்றி வந்த மனைப்பெருங்கிழத்தி தன்னை, மாசில்லாத மகள்தன்னை' எனப் பிரித்துக் கூட்டித் தத்தையையும் குணமாலையையுங் கொள்க என்பர். 'சீவகன் பன்னிரு மதிக்குள்ளே இராசமா புரத்தே சென்று குணமாலையை எய்தினானேனும் மனக்கவற்சி யின்றி நிலைபெற இருந்து எய்தாமையின் அதனைத் தேவன் கூறானாயினான்' என்றும், 'இனித் தத்தையையே நினைந்தானென்னிற் குணமாலையை வரைந்ததற்கு நிகழ்ந்த ஊடல் தீர்த்துப் புணராமையின், அவளையே நினைந்தான் என்க' என்றும் நச்சினார்க்கினியரே கூறுவதாலும், 'முன்னையாள் போன்று தத்தை முகத்துளே தோன்றுகின்றாள்' (1626) எனப் பின்னரும் தத்தையையே நினைந்தான் என வருவதாலும் அங்ஙனம் பிரித்துக்கூட்டி இருவராக்கிக் கூறுதலிற் பயனின் றென்க. 'மனைப் பெருங்கிழத்தி'யைக் குணமாலையெனக் கூறுவதும் பொருத்தமின்று, 'பெருங்கிழத்தி' தத்தையே ஆதலான்.
|
( 55 ) |