பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 698 

   (இ - ள்.) நிழல் பொதிந்த நீள்முடியான் - ஒளி பதிந்த நீண்ட முடியுடைய சுதஞ்சணன்; அழல் பொதிந்த நீள் எஃகின் அலர்தார் மார்பற்கு - அழலிலே தங்கிய நீண்ட வேலேந்திய, மலர்மாலை யணிந்த மார்பனுக்கு; கழல் பொதிந்த சேவடியால் - கழல் அணிந்த சேவடியினாலே; இம் மலைமேல் கடக்கலாகாது என எண்ணி - இம் மலைமீது செல்ல வியலாது என நினைத்து; குழல் பொதிந்த தீ சொல்லார் குழாத்தின் நீங்கி - குழலின் இசை தங்கிய இனிய மொழியாரின் திரளினிற்றும் நீங்கி; ஏந்திக் கொண்டு நினைப்பின் போகி நிலத்து இழிந்தான் - சீவகனை ஏந்தியவாறு நினைவின்படி சென்று நிலமிசை இறங்கினான்.

   (வி - ம்.) அழல் - நஞ்சுமாம். எஃகு - வேல். மார்பதற்கு - சீவகனுக்கு. கழல் பொதிந்த - வீரக்கழல் கட்டிய, குழல் : ஆகுபெயர்; இசை. நிழல் - ஒளி. முடியான் : சுதஞ்சணன். தீஞ்சொல்லார் : மங்கையர்.

( 59 )
1225 வண்டளிர்ச் சந்தனமும் வழையு மாவும் வான்றீண்டி
விண்டொழுகு தீங்கனிகள் பலவு மார்ந்த வியன்சோலை
மண்கருதும் வேலானை மறித்துங் காண்க வெனப்புல்லிக்
கொண்டெழுந்தான் வானவனுங் குருசி றானே செலவயர்ந்தான்

   (இ - ள்.) வண் தளிர்ச் சந்தனமும் வழையும் மாவும் வான் தீண்டி - வளவிய தளிரையுடைய சந்தனமும் சுரபுன்னையும் மாவும் வானைத் தொட்டு; விண்டு ஒழுகு தீ கனிகள் பலவும் ஆர்ந்த வியன் சோலை - விரிந்து தேன் ஒழுகும் இனிய பழங்கள் பலவும் நிறைந்த பெரிய பொழிலிலே; மண் கருதும் வேலானை மறித்தும் காண்க என - உலகை நினைக்கும் வேலேந்திய சீவகனைத் திரும்பவும் காண்பேனாக என்று கூறி; வானவனும் புல்லிக் கொண்டு எழுந்தான் - சுதஞ்சணன் தழுவிக்கொண்டு சென்றான்; குருசில் தானே செலவு அயர்ந்தான் - சீவகனும் தானே செல்லுதற்குப் புறப்பட்டான்.

   (வி - ம்.) பின்னர் முடிசூட்டவும், வீடுபெற்றபடி காண்டற்கும் வருதல் குறித்து, 'மறித்தும் காண்க' என்றான். ஈண்டு, 'மண் கருதும் வேலான்' என்றவாறு. பின்னும், 'மண்கொண்ட வேலான்' (சீவக. 2353) என்பர். இதற்குமுன் சீவகன் தனியே போகாமையின், 'தானே செலவயர்ந்தான்' என ஆசிரியர் நொந்துரைத்தார்.

( 60 )