பக்கம் எண் :

  7 

2. பதிகம்

 
6 மீனே றுயர்த்த கொடிவேந்தனை வென்ற பொற்பிற்
றானே றனையா னுளன்சீவக சாமி யென்பான்
வானேற நீண்ட புகழான்சரி தம்மி தன்னைத்
தேனூற நின்று தெருண்டாரவை செப்ப லுற்றேன்.

   (இ - ள்.) மீன் ஏறு உயர்த்த கொடி வேந்தனை வென்ற பொற்பின் - மீன் ஏற்றை மேம்படுத்தின கொடியை உடைய காமனை வென்ற அழகையுடைய ; ஏறு அனையான் தான் உளன் - ஆண் சிங்கம் போன்றவன்தான் ஒருவன் உளன். சீவக சாமி என்பான் - (அவன் யாரெனின்) சீவகசாமி யெனப்படுவான்; வான் ஏற நீண்ட புகழான் சரிதம் - வானிலே எழப் பரவிய புகழையுடைய அவன் ஒழுக்கம் ; நின்று தேன் ஊற - கேட்டோர் நெஞ்சிலே நின்று இனிமை மிகும்படி ; தெருண்டார் அவை இதனைச் செப்பல் உற்றேன் - தெளிந்தோர் அவையிலே இத் தொடர்நிலைச் செய்யுளைக் கூறலுற்றேன்.

 

   (வி - ம்.) மீன் ஏறு : சுறவு. 'கடல் வாழ் சுறவும் ஏறெனப் படுமே' (தொல் - மரபு- 40.) உயர்த்த - மேம்படுத்தின. சாமி : பாகதம் (வடமொழிச் சிதைவு).

 

   புகழான் என்னும் பெயர் சொல்லுவான் குறிப்பான் அவன் என்னுஞ் சுட்டுப் பெயர் மாத்திரையாக வந்தது. 'நாணி நின்றோள்' 'அணங்கருங் கடவுளன்னோள்' (அகநா - 16) என்று அகத்திற் கூறினாற் போல. இது, 'பொருளொடு புணராச் சுட்டுப் பெயராயினும்' (தொல் - கிளவி- 37) என்னுஞ் சூத்திர விதி. மேல் இங்ஙனம் வருவனவற்றிற் கெல்லாம் ஒக்கும். கதைக்கு நாயகன் ஆதலிற் சீவகனை முற்கூறினார். (இவ்வாறே சிலப்பதிகார ஆசிரியரும் கோவலனை முற்கூறாமற் கண்ணகியை முற்கூறினார்.) இதன்னை: இதனை : விரித்தல் என்னும் செய்யுள் விகாரம்.

 

   இச் செய்யுளின்கண் இப் பெருங்காப்பியத் தலைவனுடைய அழகு மெய் வலிமை கொடை என்னும் மூன்று பண்புகளும் குறிப்பாற் பெறவைத்துள்ளமை காண்க. மீனேறுயர்த்த கொடி வேந்தனை வென்ற பொற்பினையுடையான் என்றது ஒப்பற்ற அவன் அழகுடைமையை உணர்த்தியவாறு. இந்நூலின்கண் சீவகனுடைய திருமணங்கள் சிறப்புறுதற்கும் இப் பண்பு காரணமாதலுணர்க. இனி ஏறனையான் என்றது அவனது பேராற்றலுடைமையை உணர்த்தியவாறு. இஃது அவன் கட்டியங்காரன் முதலிய பகைவரை வென்றுயர்தற்குக் காரணமாதல் உணர்க. வானேற நீண்டபுகழான் என்றது அவன் வள்ளன்மையை உணர்த்தியவாறு. என்னை? புகழ் என்பது கொடையானே உண்டாவதொன்றாகலான் என்க.

 

   இதனைச் சொல்லும்போது சொல்லும் எனக்கே இஃது இனிதாயிருக்கின்றது; எனவே இதனை இவ்வுலகமும் எய்துக என்னும் கருத்