பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 712 

1250 அன்னமு மகன்றிலு மணிந்து தாமரைப்
பன்மலர்க் கிடங்குசூழ் பசும்பொற் பாம்புரிக்
கன்னிமூ தெயில்கட லுடுத்த காரிகை
பொன்னணிந் திருந்தெனப் பொலிந்து தோன்றுமே.

   (இ - ள்.) அன்னமும் மகன்றிலும் அணிந்து - அன்னத்தையும் மகன்றிலையும் அணியாகக் கொண்டு; தாமரைப் பன்மலர்க் கிடங்குசூழ் - தாமரை முதலிய பல மலர்களையுடைய அகழி சூழ்ந்த; பசும்பொன் பாம்பு உரிக் கன்னி மூதெயில் - பைம்பொன்னால் இயற்றப்பட்ட ஆளோடிகளையுடைய அழிவற்ற பழம்புரிசை; கடல் உடுத்த காரிகை - கடலை ஆடையாக உடுத்த நிலமகள்; பொன் அணிந்த இருந்தெனப் பொலிந்து தோன்றும் - பூண் அணிந்திருந்தாற்போல அழகுடன் காணப்படும்

   (வி - ம்.) மகன்றில் : ஒருவகைப் பறவை; ஆணும் பெண்ணும் பிரிவில்லாதன; மருத நிலத்திற்குரியன. பாம்புரி - மதிலின் அடியில் உள்ளவை; ஆளோடிகள் என்றும் பெயர் பெறும். பொன் : கருவியாகு பெயராகப் பூண்களை உணர்த்தியது. ”மூதெயில் ... தோன்றுமே” என வினைமுடிவு செய்க.

( 85 )
1251 அகிறரு கொழும்புகை மாடத் தாய்பொனின்
முகிறலை விலங்கிய மொய்கொ ணீள்கொடிப்
பகறலை விலங்குசந் திராபம் பான்மையி
னிகறலை விலங்குவேற் காளை யெய்தினான்.

   (இ - ள்.) அகில்தரு கொழும்புகை மாடத்து - அகில் உண்டாக்கின நல்ல புகையையுடைய மாடத்திலே; முகில்தலை விலங்கிய ஆய்பொனின் மொய்கொள் நீள்கொடி - முகில் அங்கு நின்றும் விலகற்குக் காரணமான, ஆய்ந்த பொன்னாலான நெருங்கிய நீண்ட கொடி; பகல்தலை விலங்கு சந்திராபம் - ஞாயிற்றையும் அதனிடத்தே சென்று விலக்கும் சந்திராபம் என்னும் நகரை; இகல்தலை விலங்கு வேல்களை பான்மையின் எய்தினான் - பகைவரைப் போரிலே விலக்கும் வேலேந்திய சீவகன் முறைப்படி அடைந்தான்.

   (வி - ம்.) முகில் இடத்தினின்றும் விலகுதற்குக் காரணமான நீள் கொடி என்க. பகல் - ஞாயிறு. சந்திராபம் - ஒருநகரம். காளை : சீவகன்.

( 86 )
1252 மலரணி மணிக்குட மண்ணு நீரொடு
பலர்நலம் பழிச்சுபு பரவ வேகினா
னலர்கதிர் கரும்பிளை மடுப்ப வாய்நக.
ருலகளந் தானென வுள்புக் கானரோ